தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 26 Feb 2019 3:45 AM IST (Updated: 26 Feb 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரூர்,

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புண்ணிய தலமான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு மாசி மக திருவிழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் கணபதி ஹோமம், விநாயகர் பூஜை ஆகியவையும், 19-ந்தேதி கொடியேற்றமும், அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி திருவீதி உலாவும் நடந்தது.

இதைத்தொடர்ந்து குத்துவிளக்கு பூஜையும், சாமி திருக்கல்யாணமும், ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், வடிவாம்பிகை உடனமர் தீர்த்தகிரீஸ்வரர், அம்மன் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஏற்றப்பட்டது. பின்னர் பக்தி கோஷங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அப்போது விவசாயிகள் தேரின் மீது விளை பொருட்களையும், பக்தர்கள் மிளகு, உப்பு, பொறி கடலை, ஆமணக்கு உள்ளிட்டவற்றையும் வீசினர். இந்த திருவிழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அரூர் உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தாசில்தார் அன்பு, செயல் அலுவலர் திருஞானசம்பந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேரோட்டத்தையொட்டி அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story