முதுமலை, பந்திப்பூர் வனப்பகுதிகளில் 3-வது நாளாக காட்டுத்தீ


முதுமலை, பந்திப்பூர் வனப்பகுதிகளில் 3-வது நாளாக காட்டுத்தீ
x
தினத்தந்தி 25 Feb 2019 10:45 PM GMT (Updated: 25 Feb 2019 7:01 PM GMT)

முதுலை, பந்திப்பூர் வனப்பகுதிகளில் தொடர்ந்து 3-வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்தது. 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மசினகுடி, 

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் கடந்த 23-ந் தேதி காட்டுத்தீ பற்றியது. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் போராடினர். ஆனால் பலத்த காற்று வீசியதால் அது முடியாமல் போனது. தொடர்ந்து மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ பரவியது. இதனால் வனத்துறையினர் செய்வது அறியாமல் தவித்தனர். இருப்பினும் 150-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் இரவு, பகலாக ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று வனத்துறை ஊழியர்களுடன் மசினகுடியை சேர்ந்த 120 ஜீப் ஓட்டுனர்களும், பொதுமக்களும் இணைந்து காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு மசினகுடி வனப்பகுதியில் 3 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீ அணைக்கப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து நாசமானது. மேலும் சிறிய உயிரினங்கள் தீயில் சிக்கி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையில் மண்ராடியர் சாலையோரத்தில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின்போது, 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று தீயில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதை கண்ட ஜீப் ஓட்டுனர்கள் மலைப்பாம்பை மீட்டு, அருகிலுள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.

மசினகுடி வனப்பகுதியில் காட்டுத்தீ அணைக்கப்பட்டாலும், தெப்பக்காடு வனப்பகுதியில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிகிறது. அதை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இதேபோன்று கோத்தகிரி- குன்னூர் சாலையோரத்தில் உள்ள கிருஷ்ணாபுதூர் மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. அங்கிருந்த செடி, கொடி மற்றும் புற்களில் தீ மள மளவென பரவி எரிந்தது.

இதுகுறித்து கோத்தகிரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) மோகன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மண்ணை கொட்டியும், தண்ணீரை ஊற்றியும் தீயை அணைத்தனர்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனச்சரணாலயம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியதால் வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடி-கொடிகள் என அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன. பல ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் பற்றி எரிந்த இந்த காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. வனப்பகுதியில் இருந்து விலங்குகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.

தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருகிறது. வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். ஓரளவுக்கு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் தீ வைத்ததாக ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வனச்சரணாலயத்தில் தற்போது எரிந்து வரும் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என 600 பேர் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் காட்டுத்தீ முழுமையாக அணைக்கப்படும். 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி காட்டுத்தீயினால் கருகி நாசமாகி உள்ளது. அங்கிருந்த மரங்கள், செடி-கொடிகள் தீயில் கருகிவிட்டன. காட்டுத்தீயில் சிக்கி ஏராளமான வனவிலங்குகள் பலியாகி உள்ளன. காட்டுத்தீயினால் பந்திப்பூர் வனச்சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளுக்காக நடத்தப்பட்டு வந்த சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றார்.

இந்த நிலையில் நேற்று மதிய வேளையில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெங்களூருவில் இருந்து பந்திப்பூருக்கு 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் விரைந்தன. அந்த ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதேபோல், மைசூரு மாவட்டத்திற்கு உட்பட்ட நாகரஒலே வனப்பகுதியிலும் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. அங்கும் தொடர்ந்து 3-வது நாளாக தீ பரவி வருகிறது. மைசூரு சாமுண்டி மலையிலும் காட்டுத்தீ பரவி உள்ளது. சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியான குச்சலு வனப்பகுதியிலும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

Next Story