துணை நடிகை கொலை: உடல் பாகங்களை விற்கும் கும்பலுடன் இயக்குனருக்கு தொடர்பு? கலெக்டரிடம், தாயார் பரபரப்பு புகார்


துணை நடிகை கொலை: உடல் பாகங்களை விற்கும் கும்பலுடன் இயக்குனருக்கு தொடர்பு? கலெக்டரிடம், தாயார் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 25 Feb 2019 11:00 PM GMT (Updated: 25 Feb 2019 7:04 PM GMT)

உடல் பாகங்களை விற்கும் கும்பலுடன் இயக்குனருக்கு தொடர்பு இருக்கலாம் என்று துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட துணை நடிகையின் தாயார் கலெக்டரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நாகர்கோவில்,

சென்னை ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 51). சினிமா இயக்குனரான இவரது சொந்த ஊர் தூத்துக்குடியாகும். இவருடைய மனைவி சந்தியா (35), துணை நடிகை. இவரது சொந்த ஊர் குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த ஞாலம் ஆகும்.

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதியும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், சுத்தியலால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர் அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசினார்.

இதுதொடர்பாக இயக்குனர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். துணை நடிகையின் ஒரு கை மற்றும் 2 கால்கள் அடங்கிய பார்சல் பெருங்குடி குப்பைக்கிடங்கில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் ஜாபர்கான் பேட்டை பாலத்துக்கு அடியில் இருந்து சந்தியாவின் இடுப்பு முதல் தொடை வரையிலான பகுதியை போலீசார் கைப்பற்றினர். இன்னும் சந்தியாவின் தலை, இடது கை மற்றும் உடல் பகுதிகள் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் துணை நடிகை சந்தியாவின் தாயார் பிரசன்னகுமாரி, தனது கணவர் ராமச்சந்திரன் மற்றும் உறவினர்களுடன் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது அவர் தனது மகளின் திருமண புகைப்படத்தையும் கொண்டு வந்திருந்தார்.

கண்ணீருடன் அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மூத்த மகளான சந்தியாவை தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு கடந்த 13-11-2000 அன்று திருமணம் செய்து கொடுத்தோம். எனது மகளுக்கு மாயவரதன் (17) என்ற மகனும், யோகமித்ரா (10) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் பால கிருஷ்ணன் பெற்றோர் வீட்டில் தான் வசித்து வந்தனர்.

பாலகிருஷ்ணன் சென்னையில் சினிமா இயக்குனராக இருந்து வந்ததால் அடிக்கடி தூத்துக்குடி வந்து செல்வார். அப்போது கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்படும். சந்தியாவுக்கு 2 முறை மொட்டை அடித்தும், கையில் பச்சை குத்தியும் பாலகிருஷ்ணன் கொடுமை செய்தார்.

அதன் பிறகு என்னுடன் ஊருக்கு வந்த சந்தியாவை, அவளுடைய கணவர் செல்போனில் தொடர்பு கொண்டு சென்னைக்கு வந்து விடு, நாம் சேர்ந்து வாழலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். சென்னைக்கு சென்ற என்னுடைய மகளை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரித்த போது, சந்தியாவை கொலை செய்து 7 பாகங்களாக வெட்டி பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கிலும், கூவம் ஆற்றிலும் வீசினேன் என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். ஏற்கனவே ஒரு கை, இரண்டு கால்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், இதயம், தலை, ஒரு கை போன்ற உறுப்புகள் இதுநாள்வரை கிடைக்கவில்லை.

போலீசார் விசாரித்தும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை. எனவே பாலகிருஷ்ணனுக்கு உடல் பாகங்களை விற்கும் கும்பலிடம் தொடர்பு இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மீதி உடல் உறுப்புகளை மீட்கவும், மொத்த உடலையும் மிக விரைவாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

எனது மகள் சந்தியாவின் இரண்டு குழந்தைகளும் பாலகிருஷ்ணனின் தம்பி சீனிவாசனிடம் உள்ளனர். அந்த குழந்தைகளையும் எங்களுக்கு காண்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story