செங்கல்பட்டில் ரூ.30 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறப்பு
செங்கல்பட்டில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு,
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், அருகில் உள்ள குண்டூர் ஏரி, கொளவாய் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கலக்கின்றது.
இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிலத்தடி நீர் முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர்.
இதனை கருத்தில்கொண்டு செங்கல்பட்டில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.30 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஊரக மற்றும் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் கலந்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.