சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் வீட்டு ரசீது இணைக்க கூறியதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்


சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் வீட்டு ரசீது இணைக்க கூறியதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 26 Feb 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வீட்டு வரி ரசீது இணைக்க கூறியதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் ஒரு முறை சிறப்பு நிதியுதவி ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட உள்ளது. அதற்கான கணக்கெடுப்பு பணி பெரம்பலூர் மாவட்டத்தில் அந்தந்த கிராமப்புற மற்றும் நகரப்புறங்களில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் தொழிலாளர்கள் பலர் விண்ணப்பித்தனர். அதன்படி கோனேரிபாளையம் கிராமத்தில் உள்ள ராஜீவ்காந்தி சேவா கேந்திர மைய கட்டிடத்தில் நடந்த சிறப்பு முகாமில் தொழிலாளர்கள் ரூ.2 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். அப்போது அதிகாரிகள் விண்ணப்பங்களுடன் வீட்டு வரி செலுத்தியதற்கான ரசீதை இணைத்து வழங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

மேலும் கோனேரிபாளையம் ஊராட்சி செயலாளர் வீட்டு வரி செலுத்தினால் தான் ரூ.2 ஆயிரம் பெறுவதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் என கூறியதாகவும், பின்னர் வீட்டு வரி வசூலித்தாகவும், அதற்கு ரசீது வழங்கப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதனை கண்டித்து அந்த தொழிலாளர்கள் சேவை மைய கட்டிடம் முன்பு சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பங்களுடன் ரசீது ஏதும் இணைக்க வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து, அவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மட்டும் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். 

Next Story