வடக்கலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


வடக்கலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

வடக்கலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் சாலையோரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, அதன்மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆழ்குழாய் கிணறு உள்ள இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துக்கொண்டு, அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க கூடாது என்று தகராறு செய்து வந்த நிலையில் தற்போது மின்மோட்டாருக்கு கொடுக்கப்பட்டு இருந்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் குடிநீர் இன்றி அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டி இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் குடிநீர் வழங்கக்கோரி நேற்று வடக்கலூரில் இருந்து வேப்பூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் தனிநபர் ஆக்கிரமித்துள்ள ஆழ்குழாய் கிணற்றிற்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் திறப்பு விழா காணாமல் உள்ள நீர்த்தேக்க தொட்டி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வடக்கலூர்- வேப்பூர் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story