அரியலூரில் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள்


அரியலூரில் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகளை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரனும், கலெக்டர் விஜயலட்சுமியும் வழங்கினர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடைப் பராமரிப்பு துறையின் சார்பில் ஊரக புறக்கடை நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒரு மாத வயதுடைய அசீல் இன நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் இந்த திட்டத்தின் முதற்கட்டமாக அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஓட்டக்கோவில், மணக்குடி, கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம் மற்றும் சுப்புராயபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 129 பயனாளிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 400 வீதம் ரூ.8 லட்சத்து 25 ஆயிரத்து 600 மதிப்பில் நாட்டுக் கோழி குஞ்சுகளை வழங்கினர். பின்னர் வெள்ளாடுகள் கொட்டகை கட்ட 15 பயனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரத்திற்கான காசோலை, கோழிப் பண்ணை பயிற்சிக்கான கையேடுகளையும் வழங்கப்பட்டது.

விழாவில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., மண்டல இணை இயக்குனர் (கால்நடைப் பராமரிப்புத்துறை) முகமது ஆசிப், துணை இயக்குனர் முருகன், உதவி இயக்குனர் செல்வராஜ், கால்நடை உதவி மருத்துவர்கள் சேகர், ரங்கசாமி, வேல்முருகன், குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக நடந்த சுகாதாரத்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். முன்னதாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சித்த மருத்துவம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு முகமை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்ட விளக்க கண்காட்சியினை அவர்கள் பார்வையிட்டனர். முகாமில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த்காந்தி, அரசு மருத்துவமனை அலுவலர்கள் கண்மணி, கொளஞ்சிநாதன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி டாக்டர் முத்துகுமார், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ராஜசேகர், வட்டார மருத்துவ அலுவலர் அனிதா, டாக்டர் உமாமகேஷ்வரி மற்றும் அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரியலூர் பஸ் நிலையத்தில் நடந்த தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், கலெக்டர் விஜயலட்சுமி திறந்து வைத்து பார்வையிட்டனர். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தர்ராஜ், அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜெயஅருள்பதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன் (செய்தி), எழிலரசன் (விளம்பரம்), அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story