சென்னிமலை மாரியப்பா நகரில் சாலை அமைக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு
சென்னிமலை மாரியப்பா வீதியில் சாலை அமைக்காவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.
சென்னிமலை ஈங்கூர் ரோடு மாரியப்பா நகரை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–
மாரியப்பா நகரில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக ரோடு போடப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைப்பதற்காக மணல் கொட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.
இதனால் ரோடு குண்டும், குழியுமாக மாறி புழுதி பறக்கிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் ரோட்டில் குட்டைபோல் தேங்கி நிற்பதோடு சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
தார்சாலை அமைக்கக்கோரி நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் குண்டும்–குழியுமான ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் தாளக்கரை பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–
எனக்கு 2 குழந்தைகள் உள்ளன. எனது கணவர் அத்தாணியில் உள்ள ஒரு கயிறு தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26–ந்தேதி கயிறு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது சிலிண்டர் வெடித்து எனது கணவர் இறந்துவிட்டார். அவரது வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடத்தி வந்தேன். தற்போது அவர் இல்லாததால் 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. எனவே எனக்கு நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் மனு கொடுத்தனர். மொத்தம் 287 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.