பரமக்குடி வாக்குச்சாவடி மையத்தில் ஆள்மாறாட்டம்: பேராசிரியருக்கு பதில் பணியில் இருந்த கல்லூரி மாணவர் கலெக்டர் நேரடி ஆய்வில் சிக்கினர்; 3 பேர் கைது


பரமக்குடி வாக்குச்சாவடி மையத்தில் ஆள்மாறாட்டம்: பேராசிரியருக்கு பதில் பணியில் இருந்த கல்லூரி மாணவர் கலெக்டர் நேரடி ஆய்வில் சிக்கினர்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆள்மாறாட்டம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியருக்கு பதிலாக கல்லூரி மாணவர் பணியில் இருந்தார். கலெக்டர் ஆய்வுக்கு வந்த போது இந்த மோசடியை கண்டுபிடித்தார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடி,

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் போன்ற பணிகள் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த பணியில் அரசு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடந்த இந்த பணியை, அந்த மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பரமக்குடியில் ஒரு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு பொதுமக்கள் அளித்த விண்ணப்பங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த மையத்தில் பணியில் நியமிக்கப்பட்ட முதல்நிலை அலுவலரான, கல்லூரி பேராசிரியர் முருகனுக்கு பதிலாக அரசு கல்லூரி மாணவர் தினகரன் பணியில் ஈடுபட்டு இருந்ததை கலெக்டர் வீரராகவராவ் கண்டுபிடித்து விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆள் மாறாட்டம் செய்தவர்கள், அதற்கு உடந்தையாக செயல்பட்டவர் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க பரமக்குடி தாசில்தார் பரமசிவனுக்கு, கலெக்டர் வீரராகவ ராவ் உத்தரவிட்டார். இதையடுத்து தாசில்தார் பரமசிவன் அளித்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் தினகரன், பரமக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த கீழக்கரை தனியார் கல்லூரி பேராசிரியர் முருகன்(வயது 27), இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட வாக்குச்சாவடி மைய கண்காணிப்பாளர் பரமக்குடி காந்தி காலனியை சேர்ந்த பரமக்குடி நகரசபை பணியாளர் சண்முகவேல் (39) ஆகிய 3 பேரைகைது செய்தனர்.

Next Story