இறந்தவர் நிலம் போலி ஆவணம் மூலம் விற்ற வழக்கு; மேலும் ஒருவர் கைது


இறந்தவர் நிலம் போலி ஆவணம் மூலம் விற்ற வழக்கு; மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

இறந்தவர் பெயரில் இருந்த நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை,

தேவகோட்டையை அடுத்த மேலசெம்பொன்மாரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பன். இவருக்கு தேவகோட்டையை அடுத்த உஞ்சனை கைகாட்டி அருகே 1¾ ஏக்கர் நிலம் உள்ளது. இந்தநிலையில் சுப்பன் கடந்த 30.10.1999 அன்று இறந்து போனார்.

இதையடுத்து சுப்பனின் நிலத்தை போலி ஆவணம் மூலம் தேவகோட்டை புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்த சிவகுமார் (வயது 45) என்பவர் உள்பட சிலர் கடந்த 10.5.2018 அன்று சுப்பன் விற்பனை செய்தது போல தேவகோட்டை சார்–பதிவாளர் அலுவலகத்தில் கிரைய பத்திரம் பதிவு செய்தனராம். பின்னர் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டனராம்.

இதுகுறித்து அறிந்த சுப்பனின் மகன் செல்லகண்ணு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரனிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் மாவட்ட குற்றபிரிவு இன்ஸ்பெக்டர் அல்லிராணி, சப்–இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வெள்ளைச்சாமி, ஏட்டு திருமுருகன் ஆகியோர் இந்த வழக்கில் தொடர்புடைய மேலசெம்பொன்மாரி கிராமத்தை சேர்ந்த முரசொலி (43) என்பவரை கைது செய்தனர்.


Next Story