மதுரை அடகுக்கடையில் 12 கிலோ தங்க நகை கொள்ளையில் துப்புதுலங்கியது 4 பேரிடம் தீவிர விசாரணை


மதுரை அடகுக்கடையில் 12 கிலோ தங்க நகை கொள்ளையில் துப்புதுலங்கியது 4 பேரிடம் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 26 Feb 2019 4:30 AM IST (Updated: 26 Feb 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அடகுக் கடையில் 12 கிலோ தங்க நகைகள், பணம் கொள்ளை போன சம்பவத்தில் துப்பு துலங்கியுள்ளது. வேன் எண்ணை வைத்து 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை அழகர்கோவில் ரோட்டைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 61). இவர் நரிமேடு மருதுபாண்டியர் நகரில் உள்ள ஒரு வீட்டில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்த 18-ந் தேதி நள்ளிரவில் கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் அடகுக் கடையின் கதவு, லாக்கர்களை உடைத்து சுமார் 12 கிலோ தங்க நகைகள் மற்றும் 9 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் செந்தில்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் அருணாசலம், சக்கரவர்த்தி, முருகன் ஆகியோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தின்போது எதிரே உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த காட்சிகளை வைத்து போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். அதில் நள்ளிரவு 2.51 மணிக்கு முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் அடகு கடையின் முன் பக்கம் வந்து நிற்பது பதிவாகி உள்ளது. அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் அந்த வழியாக சென்றுள்ளார்.

அதன்பின்பு கொள்ளையன் ஒருவன் மட்டும் சுவர் ஏறி குதித்து எதிரே கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை வேறு திசையில் திருப்பி வைத்துள்ளான். பின்னர் மினி சரக்கு வேன் ஒன்று வருவதும், அதில் அவர்கள் ஏறி தப்பிச் செல்வதும் கேமராவில் பதிவாகி உள்ளது. ஆனால் அந்த கேமராவில் வேனின் முழுமையான உருவம் எதுவும் இல்லை.

எனவே வேறு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த வேன் கடந்து போகும் காட்சிகள் ஏதும் பதிவாகியுள்ளதா என்று பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் அதே போன்ற வேன் ஒன்று கடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதில் அந்த வேனின் எண் தெரிந்தது. அந்த எண்ணை வைத்து போலீசார் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய வெல்டிங் ராடு மதுரையை சுற்றியுள்ள பகுதியில் தயாரிக்கப்பட்டு இருப்பது போன்று உள்ளது. எனவே அது குறித்தும் தனிப்படை போலீசார் நகரில் உள்ள முக்கிய வெல்டிங் கடைகளுக்குச் சென்று விசாரித்து வருகின்றனர். இதில் சில தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஓரிரு நாட்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தனிப்படை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

மேலும் தமிழகம் முழுவதும் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் பற்றிய தகவல்களையும் தனிப்படை போலீசார் பெற்று அதன்அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story