கோவை கோட்ட வனப்பகுதியில், காட்டுத்தீ பரவுவதை தடுக்க 40 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள்


கோவை கோட்ட வனப்பகுதியில், காட்டுத்தீ பரவுவதை தடுக்க 40 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:00 AM IST (Updated: 26 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

கோவை கோட்ட வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க 40 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் போடப்பட்டு உள்ளன. கண்காணிப்பு பணியில் ஈடுபட சிறப்புக்குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை கோட்ட வனப்பகுதி 670 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதி கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்களை கொண்டது.

இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, கரடி, காட்டு யானை, காட்டெருமை, கழுதைப்புலி, செந்நாய் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வனப்பகுதியில் காட்டுத்தீ பரவுவதை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்படும்.

அதாவது, வனப்பகுதியில் இலையுதிர் காலத்தில் அங்குள்ள மரங்கள் மற்றும் செடிகளில் இலைகள் உதிர்ந்தும், காய்ந்தும் இருக்கும். அதுபோன்று புற்களும், கீழே விழுந்து கிடக்கும் இலைகளும் காய்ந்து எளிதில் தீப்பிடிக்கக்கூடிய நிலையில் இருக்கும். அப்போது தீப்பிடித்தால் மளமளவென பரவிவிடும். இதை தடுக்க ஆங்காங்கே காய்ந்து இருக்கும் சருகுகள், புற்கள், சிறு தாவரங்களை வெட்டி பாதை போன்று வெற்று தரையை ஏற்படுத்துவார்கள்.

ஏதாவது ஒரு இடத்தில் தீ பிடிக்கும்போது அந்த தீ வேறு இடத்துக்கு பரவாமல், வெற்றுத்தரை அருகே வரும்போது தானாகவே அணைந்து விடும். இதற்கு பெயர்தான் தீத்தடுப்பு கோடுகள். பொதுவாக கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வனப்பகுதியில் அமைக்கப்பட்டு விடும். தற்போது கோவை கோட்ட வனப்பகுதியில் 40 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வனப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் இருக்கும் பகுதியை தேடி அலைகின்றன. சிறு சிறு பாறைகளில் வெயில் விழுவதால் அவை கடுமையாக சூடாகி விடுகிறது. அந்த நேரத்தில் மற்றொரு சிறிய கல் அந்த பாறை மீது விழும்போது ஏற்படும் தீப்பொறி மூலம் எளிதில் தீப்பிடித்து விடும்.

மேலும் காற்று வேகமாக வீசும்போது மூங்கில்கள் மோதினாலும் தீப்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதுபோன்று மலையடிவார பகுதியில் வளர்ந்து இருக்கும் புற்கள், கருகிய நிலையில் இருக்கும். அந்த புற்களை அகற்றினால்தான் அது மீண்டும் வளரும் என்று நினைத்து கால்நடை மேய்ப்பவர்கள் அவற்றில் தீ வைத்துவிடுவார்கள். இப்படிதான் வனப்பகுதியில் தீப்பிடிக்கிறது.

எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், தீப்பிடித்தால் அது பரவாமல் இருக்க கோவை கோட்ட வனப்பகுதியில் 40 கி.மீ. தூரத்துக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து விடும். கண்காணிப்பு பணியில் ஈடுபட 14 பேர் கொண்ட சிறப்புக்குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பொதுவாக 90 சதவீத தீப்பிடிக்கும் சம்பவம் இயற்கையாகதான் நடக்கிறது. 10 சதவீதம் செயற்கையாக நடக்கிறது. சிலர் வனப்பகுதிக்குள் சென்று மது அருந்திவிட்டு பீடி, சிகரெட்டை சரியாக அணைக்காமல் தூக்கி வீசிவிடுகிறார்கள். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை பொதுமக்கள் தடுக்க வேண்டும்.

தற்போது வனவிலங்குகள் தண்ணீர் தேடி வனப்பகுதிக்குள் அலைந்து வருகிறது. எனவே யாரும் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்லக்கூடாது. அவ்வாறு செல்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story