தனியார் நிலத்தில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தக்கோரி லாரியை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்


தனியார் நிலத்தில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தக்கோரி லாரியை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 Feb 2019 3:30 AM IST (Updated: 26 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிலத்தில் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தக்கோரி லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெருமாநல்லூர்,

பெருமாநல்லூரை அடுத்த மேற்கு பதி ஊராட்சியில் சின்னேரிபாளையம் என்கிற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் திருப்பூர் அங்கேரிபாளையம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஒருவர் 1.80 ஏக்கர் பரப்பளவு நிலத்தை வாங்கியுள்ளார். அந்த நிலத்தில் இருந்து கடந்த ஒரு வாரமாக இரண்டு ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை தோண்டி எடுத்து 30-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் இரவு பகலாக கொண்டு செல்கிறார்கள். மண்ணை எடுத்து செல்வதால் தாங்கள் குடியிருக்கும் பகுதி பாதிக்கப்படுகின்ற நிலையை பொதுமக்கள் நிலத்தின் உரிமையாளரிடம் எடுத்துரைத்தனர்.ஆனாலும் தொடர்ந்து டிப்பர் லாரிகளில் மண் எடுத்து செல்லப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் லாரிகள் செல்லும் வழித்தடத்தில் மரங்களை வெட்டி போட்டு லாரிகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த பிரச்சினை குறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த கிராமத்தில் குடியிருக்கும் நாங்கள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழுகிறோம். இங்கு அள்ளி செல்கின்ற செம்மண் லோடு ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெளியில் விற்பனை செய்கின்றனர். சுமார் 9 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட குழியால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் மண்சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். இந்த பகுதிக்கு வருகை தருகின்ற அவினாசி தாசில்தார் வாணி ஜெகதாம்பாள் மற்றும் கிராம நிர்வாகம் மற்றும் வருவாய் அலுவலர்கள் இதனை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும் இரவு பகலாக இடைவிடாது ஓடும் லாரிகளால் கால்நடைகளும், பள்ளிகுழந்தைகளும், பொதுமக்களும் சாலையை கடக்க முடியவில்லை. இந்த லாரிகளின் அழுத்தம் காரணமாக சாலைகள் பழுதடைந்து விட்டன. பறக்கின்ற மண் தூசிகளால் வீடுகள் முழுவதும் மண் படிந்து கிடக்கிறது. உணவுகள் சாப்பிட முடியாத நிலை உருவாகி விட்டது. இதனால் அதிகாரிகளின் செயல்பாடுகளில் நம்பிக்கை இழந்து பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தனியார் நிலத்தில் மண் அள்ளுவதை தடுத்துநிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். வழித்தடங்கள் அடைக்கப்பட்டதை தொடர்ந்து லாரிகள் அனைத்தும் மண்ணை அங்கேயே கொட்டி விட்டு காலியாக திரும்பி சென்றன. மதியம் வரை பொதுமக்கள் போராட்டம் நீடித்ததால் மண் எடுத்து செல்வது முற்றிலும் நிறுத்தப்பட்டது.


Next Story