குமரிக்கு வருகை தரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வேண்டாம் வைகோவுக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்


குமரிக்கு வருகை தரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வேண்டாம் வைகோவுக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:45 AM IST (Updated: 26 Feb 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 1-ந் தேதி குமரிக்கு வருகை தரும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட வேண்டாம் என்று வைகோவுக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகர்கோவில்,

நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை ஏற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் என்ற மன் கி பாத் உரையாடல் நிகழ்ச்சியை வானொலி மூலம் நடத்தி வந்தார். நேற்றுடன் (அதாவது நேற்று முன்தினத்துடன்) ஐந்து ஆண்டுக்கான மனதின் குரல் நிகழ்ச்சி நிறைவு பெற்று இருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியின் தாக்கம் இந்தியாவின் அனைத்து மக்கள் மத்தியிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி மக்களின் கருத்துக்களை அறிவதற்காக, ‘உங்கள் யோசனைகளை எனக்கு தெரிவியுங்கள்’ என்ற “பாரத் கெ மன் கி பாத், மோடி கெ சாத்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தின்படி மக்களின் ஆலோசனையை கடிதம் மூலம் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார். அதாவது பொது இடங்களில் பெட்டிகள் வைக்கப்படும். அதன் அருகில் மக்களின் கருத்துக்களை எழுதும் படிவங்களும் வைக்கப்படும். மக்கள் தங்களது கருத்துக்களை அந்த படிவத்தில் எழுதி பெட்டியில் போடலாம். இதை டெல்லிக்கு எடுத்துச் சென்று மக்கள் என்ன விரும்புகிறார்கள், என்பதை அறிந்து வரும்காலங்களில் அதன்படி செயல்பட முடியும். மேலும் மக்களின் கருத்துக்களை கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் மொத்தம் 8 பெட்டிகள் வைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் ஆரல்வாய்மொழி மற்றும் ஈத்தாமொழியிலும், நாகர்கோவில் தொகுதியில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு மற்றும் வடசேரி சந்திப்பு ஆகிய பகுதிகளிலும், குளச்சல் தொகுதியில் திங்கள்நகரிலும், பத்மநாபபுரம் தொகுதியில் தக்கலையிலும், கிள்ளியூர் தொகுதியில் புதுக்கடையிலும், விளவங்கோடு தொகுதியில் குழித்துறையிலும் இந்த பெட்டிகள் வைக்கப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை இந்த பெட்டிகள் பகலில் மட்டும் இருக்கும். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் 80 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற போகின்றன. இந்த திட்டம் தொடங்கிய உடனேயே நாடு முழுவதும் ஒரு கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு விட்டது. இந்த திட்டத்துக்கும், தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. எங்கள் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என முழுமையாக நம்புகிறேன்.

வைகோவிற்கு எனது வெளிப்படையான வேண்டுகோள் ஒன்றை வைக்கிறேன். அதாவது கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வருகிற 1-ந் தேதி அரசு விழா நடக்கிறது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். தமிழகத்துக்கு நல்லது செய்ய வருகை தரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டாம். எனது வேண்டுகோளை வைகோ ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து ஒரு உறுப்பினரை பெற்றிருந்தபோதும் பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைத்தது. வருகிற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கிடைப்பார்கள். கூட்டணி கட்சிகளுக்கு குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் கிடைப்பார்கள். அதனால் 400 எம்.பி.க்களுடன் பா.ஜனதா ஆட்சி மீண்டும் அமையும்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தொடர்ந்து மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் கொண்டு வரப்பட்ட பிரதமர் மோடியின் புதிய திட்டத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பொன்.ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story