தொடரும் காட்டுத்தீ, மகிமையை இழக்கும் ‘மலைகளின் இளவரசி’


தொடரும் காட்டுத்தீ, மகிமையை இழக்கும் ‘மலைகளின் இளவரசி’
x
தினத்தந்தி 25 Feb 2019 11:00 PM GMT (Updated: 25 Feb 2019 9:26 PM GMT)

‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீயால் தனது மகிமையை இழந்து வருகிறது. புகை மண்டலத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவும். ஆனால் காலநிலை மாற்றத்தால் கொடைக்கானலில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதன்காரணமாக மரங்கள், புற்கள் கருகி வருகிறது. இதனால் வனப்பகுதிகள், தனியார் பட்டா நிலங்களில் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருகிறது. அத்துடன் பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாக பரவுவதுடன், புகைமண்டலமும் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களாக கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. நேற்று முன்தினம் மாலை குறிஞ்சிநகர், வெள்ளிநீர்வீழ்ச்சி அருகே உள்ள தேன் பண்ணை, பேத்துப்பாறை, பெருமாள்மலை பிரிவு போன்ற தனியார் தோட்டங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களில் தீப்பிடித்தது. செடி, கொடிகள், மரங்கள் பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ பற்றி எரிந்து வருவதால் அதனை அணைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக் கும் பணியினை ஆர்.டி.ஓ. சுரேந்திரன், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி ஆகியோர் பார்வையிட்டனர்.

இதற்கிடையே தனியார் பட்டா நிலங்களின் அருகே வனப்பகுதி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளுக் குள் தீ பரவாமல் தடுக்கும் முயற்சியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக கொடைக் கானல் நகரமே நேற்றும் புகைமண்டலமாக காட்சியளித்தது. மேலும் தீ விபத்தில் ஏற்பட்ட புகை மற்றும் தூசு நகரை சூழ்ந்ததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டனர்.

மேலும் புகைமண்டலத்தால் கண் எரிச்சல், சுவாசக்கோளாறால் பொதுமக்கள் அவதியடைந்தனர். வனப் பகுதி மற்றும் தனியார் தோட்டப்பகுதிகளில் தீப்பற்றி எரிந்து வருவதால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த கூடுதல் தீத்தடுப்பு குழுவினரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக் கானலில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருவதால் தனது மகிமையை இழந்து வருகிறது.

Next Story