சேலத்தில் பரபரப்பு: நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை


சேலத்தில் பரபரப்பு: நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 25 Feb 2019 10:30 PM GMT (Updated: 25 Feb 2019 9:43 PM GMT)

சேலத்தில் நகைக்கடைகளில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் டவுன் பெரியகடை வீதியில் தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மற்றொரு கிளை சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சொர்ணபுரியில் உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 2 நகைக்கடைகளுக்கும் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினரின் இந்த திடீர் சோதனையால் நகைக்கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடைக்கு வெளியே ஊழியர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த சோதனையின் போது 2 நகைக்கடைகளிலும் முன்பக்கம் உள்ள இரும்பு ஷட்டர் கதவு மூடப்பட்டது. கடை முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியிடம் வருமான வரித்துறையின் சோதனை முடியும் வரை வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் யாரையும் உள்ளே விடவேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.

2 கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனியே பிரிந்து சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் நகை விற்பனை மற்றும் நகை கொள்முதல் செய்தது, தங்க கட்டிகள் வாங்கி, விற்றது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்தனர். தங்க நகைகள் விற்றதற்கு வருமான வரி சரியாக கட்டி உள்ளனரா? என்றும் விசாரணை நடைபெற்றது.

மேலும் எத்தனை வங்கி கணக்குகள் உள்ளன, கணினியில் உள்ள பதிவுகள் என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வருமான வரித்துறையினரின் இந்த சோதனை காலை முதல் மாலை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. நகைக்கடைகளில் நேற்று நடைபெற்ற இந்த சோதனை சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story