வேலூர் மத்திய ஆண்கள் ஜெயில் வளாகத்தில் கிடந்த சிம்கார்டு கைதிகள் பயன்படுத்தியதா?
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயில் வளாகத்தில் செல்போன் சிம்கார்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. அதனை கைதிகள் பயன்படுத்தினார்களா? என்று ஜெயில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் தொரப்பாடியில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய ஜெயில்கள் உள்ளன. இங்கு தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, புகையிலை, சிகரெட், செல்போன் போன்ற பொருட்களை கைதிகள் பயன்படுத்துவது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தனிப்பிரிவு போலீசாரும் ஜெயிலில் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை யாராவது வெளியே இருந்து ஜெயிலுக்குள் வீசுகின்றனரா? என்பதை கண்காணிக்கவும், ஜெயிலில் இருந்து கைதிகள் வெளியே தப்பி விடாமல் தடுக்கவும் 24 மணி நேரமும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் கைதிகள் அறை மற்றும் ஜெயில் வளாகத்தில் இருந்து கஞ்சா, செல்போன், சிம்கார்டு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 4-வது பிளாக்கின் பின்புறம் சிறைக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள மணலில் செல்போனில் பயன்படுத்தும் 4ஜி சிம்கார்டு ஒன்று கிடந்தது. அதனை சிறைக்காவலர்கள் கைப்பற்றினர். தொடர்ந்து அந்த சிம்கார்டு ஜெயில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜெயில் அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் குறிப்பிட்ட நபரின் பெயரில் புகார் இல்லாததால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர்.
அதனை தொடர்ந்து ஜெயில் அதிகாரிகள், ஜெயில் கைதிகள் அந்த சிம்கார்டை பயன்படுத்தினார்களா? அல்லது வெளியே இருந்து யாராவது ஜெயிலுக்குள் வீசினார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story