நாடாளுமன்ற தேர்தல் ரத்னகிரி- சிந்துதுர்க்கில் நிலேஷ் ரானே போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் நிலேஷ் ரானே ரத்னகிரி-சிந்துதுர்க் தொகுதியில் போட்டியிடுவார் என நாராயண் ரானே அறிவித்துள்ளார்.
மும்பை,
கொங்கன் மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்படுபவர் நாராயண் ரானே. இவர் 1995-ம் ஆண்டு சிவசேனா கூட்டணி அரசை அமைத்தபோது முதல்-மந்திரியாக பதவி வகித்தார். பின்னர் உத்தவ் தாக்கரேயுடன் கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.
இந்தநிலையில் பா.ஜனதா ஆதரவுடன் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவார் என்று கருதப்பட்டது. ஆனால் சிவசேனாவுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்ததால் அதிருப்தி அடைந்தார்.
இந்தநிலையில் கொங்கனில் உள்ள ரத்னகிரி- சிந்துதுர்க் நாடாளுமன்ற தொகுதியில் தனது மகன் நிலேஷ் ரானே சுவாபிமான் கட்சி சார்பில் போட்டியிடுவார் என நாராயண் ரானே அறிவித்து உள்ளார்.
கடந்த தேர்தலின் போது, அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நிலேஷ் ரானே சிவசேனாவை சேர்ந்த விநாயக் ராவத்திடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story