பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு கவர்னர் உரை ரூ.4,284 கோடிக்கு துணை மானிய கோரிக்கை தாக்கல்


பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது அரசின் சாதனைகளை பட்டியலிட்டு கவர்னர் உரை ரூ.4,284 கோடிக்கு துணை மானிய கோரிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 26 Feb 2019 5:00 AM IST (Updated: 26 Feb 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கவர்னர் உரை நிகழ்த்தினார். ரூ.4 ஆயிரத்து 284 கோடி துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்து.

மும்பை, 

மராட்டிய இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியதும் சட்டசபை சபாநாயகர் ஹரிபாவு பாக்டே, காஷ்மீர் புலவாமா தாக்குதலில் உயிரிழந்த 40 துணை ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து இறந்த வீரர்களுக்கு சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் தனது உரையை தொடங்கிய கவர்னர் வித்யாசாகர் ராவ், துணை ராணுவ படையினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:-

மராட்டிய அரசு நலிவுற்ற மக்களுக்காக கடுமையாக உழைக்கிறது. அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமுதாயத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது சட்டமாக்கப்பட்டது.

மேலும் தங்கர், வதார், பாரித், கும்பார் மற்றும் கோலீஸ் போன்ற பின்தங்கிய சமுதாயத்தினரின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

விலங்குகள் நலம், சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட 14 நிர்வாக துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் திட்டம் மராட்டியத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரணம் வழங்கவும், தண்ணீர் வினியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட இந்த அரசு, சத்ரபதி சிவாஜி மகாராஜ் சேத்காரி சன்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 51 லட்சம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.24 ஆயிரம் கோடி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் ரூ.18 ஆயிரத்து 36 கோடியே 43 லட்சம் விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

6.15 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நீர்ப்பாசன வசதி பெறும் வகையில் புதிய குழாய் வலைப்பின்னல் உருவாக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. மேலும் விவசாயிகளின் விளைபயிர்களுக்கு சரியான விலை வழங்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.

5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 121 கோடி வரை குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை வீழ்ச்சியின்போது குவிண்டாலுக்கு ரூ.200 மானியமாக வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கவர்னர் வித்யாசாகர் ராவ் பேசினார்.

மேலும் நேற்று சட்டசபை மற்றும் மேல்-சபையில் சுமார் ரூ.4 ஆயிரத்து 284 கோடிக்கான துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய நிதி மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித்தொகை ஆகியவையும் இதில் அடங்கும்.

அரசின் கூடுதல் செலவை சமாளிக்கும் வகையில் இந்த துணை மானிய தொகை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story