நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 Feb 2019 4:00 AM IST (Updated: 26 Feb 2019 3:36 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை அபகரித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சித்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற கூலி தொழிலாளி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் கடந்த 23-10-2017 அன்று குடும்பத்துடன் தீக்குளித்தார். தீக்காயம்பட்ட இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிரதானவாசலும், ஜெயில் அருகில் உள்ள வாசலும் தவிர மற்ற அனைத்து வாசல்களும் அடைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தின் 2 வாசல்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளே செல்கிறவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் கலெக்டர் அலுவலகத்திற்குள் யாரும் பாட்டில் மற்றும் மருந்து மாத்திரைகள் கொண்டு செல்ல போலீசார் தடை செய்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த மூதாட்டி ஒருவர் கலெக்டர் அலுவலகத்தின் வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கத்தின் பின்வாசல் அருகில் மனு கொடுக்க நின்று கொண்டு இருந்தார். அவர் திடீரென தனது கையில் வைத்திருந்த 6 சிறிய பாட்டில்களில் இருந்த மண்எண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீவைக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுதாரித்து கொண்ட அந்த போலீார் மூதாட்டியை பிடித்து அவருடைய உடலில் தண்ணீரை ஊற்றி, போலீஸ் வேனில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தென்காசியை சேர்ந்த அய்யப்பன் என்பவருடைய மனைவி ராஜம்மாள்(வயது65) என்றும், அவரிடம் சிலர் பணத்தை வாங்கி கொண்டு அவருடைய வீட்டை அபகரித்து விட்டதாகவும், வீட்டை அபகரித்தவர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி பலமுறை போலீசாரிடமும், கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தான் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதாகவும் கூறினார்.

ராஜம்மாள், கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாசலில் பலத்த சோதனை நடந்ததால், மண்எண்ணெயை, 6 சிறிய குளிர்பான பாட்டிகளில் ஊற்றி வைத்துக்கொண்டு பெண்கள் சிறை உள்ள வாசல் வழியாக உள்ளே வந்து, மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story