துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த ஆனந்தகண்ணன் (வயது 32), தேவர் காலனியை சேர்ந்த தங்கம் (37), சுப்பையாபுரத்தை சேர்ந்த பாலகுமார் (24), இந்திரா நகரை சேர்ந்த ராஜா சிங் (19) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த கலவரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டோம்.
தற்போது நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். எங்களுக்கு அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி பூபால்ராயர்புரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 4-வது மற்றும் 5-வது தெரு திரவியபுரத்தில் மையவாடி உள்ளது. இந்த இடத்தில் மின் விளக்குகள் இல்லாததால் இருளாக காணப்படுகிறது.
இதனை சமூக விரோதிகள் பயன்படுத்தி அந்த பகுதியில் மது அருந்துகிறார்கள். எனவே அந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி நேரு காலனி கிளை செயலாளர் ஆறுமுகம் என்பவர் கொடுத்த மனுவில், தமிழக அரசு அறிவித்து உள்ள ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வறுமை கோட்டுக்கு கீழ் பெயர் பட்டியலில் உள்ளவர்கள் மற்றும் ரேஷன் கடையில் 35 கிலோ அரிசி அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க அரசு அறிவித்து உள்ளது. 35 கிலோவிற்கு கீழ் அரிசி வாங்கும் பல ஏழை குடும்பங்கள் உள்ளன.
எனவே சமீபத்தில் பொங்கல் பரிசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்கப்பட்டது போல், இந்த சிறப்பு நிதியையும் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கோவில்பட்டி நகர செயலாளர் முருகன் தலைமையில் தூத்துக்குடி மாநகர செயலாளர் ராஜா, புறநகர் செயலாளர் ராஜா, கோவில்பட்டி நகர குழு உறுப்பினர் சக்திவேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து மற்றும் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், கோவில்பட்டி நகரசபைக்கு உட்பட்ட மந்திதோப்பு ரோடு குறுகலாக உள்ளது. தினமும் அந்த பகுதி வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
மங்கள விநாயகர் கோவில் திருப்பம் முதல் பால்பண்ணை வரை மந்திதோப்பு ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே இந்த விபத்துகளை தடுக்க வேண்டி, மந்திதோப்பு ரோட்டை மங்கள விநாயகர் கோவில் திருப்பம் முதல் பால்பண்ணை வரை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்து மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் கணேசன் கொடுத்த மனுவில், திருச்செந்தூர் தாலுகா வெங்கடராமானுஜபுரம் கிராமத்தில் சுப்பிரமணியபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் ஸ்மார்ட் கார்டில் சுப்பிரமணியபுரம் என்று இருந்த ஊரின் பெயரை மெய்யூர் கிழக்கு என்று மாற்றியுள்ளனர். ஆதார் கார்டு, பழைய ரேஷன் கார்டு, வீட்டு முகவரிக்கு உரிய தீர்வை ரசீதில் ஒரு முகவரியும், ஸ்மார்ட் கார்டில் ஒரு முகவரியையும் திணித்துள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மெயின் ரோட்டில் சுப்பிரமணியபுரம் என்று பெயர் பலகை வைக்காமல் மெய்யூர் என்று வைத்து உள்ளனர். அதனையும் மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எட்டயபுரம் தாலுகா கீழ நாட்டுக்குறிச்சி கிராமத்தில் உள்ள இடத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஒரு நபருக்கு சவுடு மண் குவாரி அமைக்க அனுமதி வழங்கியது. ஆனால் அந்த நபர், சவுடு மண் குவாரிக்கு அனுமதி வாங்கி விட்டு, அதன் அருகே உள்ள விவசாய நிலங்களை பாழ்படுத்தி, அங்கு உள்ள பனை மரங்கள், மின் கோபுரங்கள் அனைத்தும் கீழே விழக்கூடிய அளவில் மணல் கொள்ளை அடித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்களை குண்டர்கள் வைத்து மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சவுடு மண் குவாரி அமைந்து உள்ள இடத்தை கண்காணிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
Related Tags :
Next Story