ஜெயலலிதா பிறந்த நாள் விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஏரல்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. ஏரல் காந்தி சிலை பஸ் நிறுத்தம் அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர், ஏரல் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கினார். நகர செயலாளர் ஆத்திப்பழம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 100 பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது. நகர செயலாளர் கப்பல் ராமசாமி, முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு அருகே பன்னீர்குளம் ஆதரவற்ற இல்ல குழந்தைகளுக்கு அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா காலை, மதியம் உணவு வழங்கினார்.
கடம்பூரில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம் தேவர் சிலை முன்பு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் காசிராஜன் தலைமையில், மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஸ்ரீவைகுண்டம் அன்னை சத்யா அரசு ஆதரவற்ற இல்ல மாணவிகளுக்கு அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. மதிய உணவு மற்றும் புத்தாடை, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் மேடைபிள்ளையார் கோவில் முன்பு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.ம.மு.க. மாநில அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். பெண்களுக்கு குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் அன்னை சத்யா அரசு ஆதரவற்ற இல்ல மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் மெயின் பஜாரில் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்கான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். நகர செயலாளர் முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கழுகுமலையில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.ம.மு.க. நகர செயலாளர் கோபி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்செந்தூர் தேரடி திடலில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு அ.தி.மு.க. நகர செயலாளர் மகேந்திரன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வீரபாண்டியன்பட்டினத்தில் அ.தி.மு.க.வினர் கட்சி கொடியேற்றி, 71 பெண்களுக்கு சேலைகளை வழங்கினர்.
திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் திருப்பதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு பழங்களை வழங்கினார்.
Related Tags :
Next Story