நெல்லை அருகே பயங்கரம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை உறவினர்கள் சாலை மறியல்; 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


நெல்லை அருகே பயங்கரம்: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை உறவினர்கள் சாலை மறியல்; 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உசேன்குமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகன் ராஜா (வயது 19). இவர் மேலதிடியூரில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ராஜா தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் உள்ள சிவன் கோவில் அருகே வந்தபோது அங்கு பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதைக்கண்ட ராஜா, மோட்டார்சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டிச் சென்றது.

அங்கிருந்த வாய்க்கால் பாலம் அருகே ஓடும்போது அந்த கும்பல் ராஜாவை ஓட, ஓட விரட்டி வெட்டியது. இதில் கீழே விழுந்த அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்ததால் ராஜா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். உடனே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், சேரன்மாதேவி துணை சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை போலீசார் எடுக்க முயன்றனர். ஆனால், அதற்குள் ராஜாவின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்தனர். ராஜாவின் உடலை எடுக்கவிடாமல் தடுத்தனர்.

இந்த பயங்கர கொலையில் ஈடுபட்ட 5 பேரையும் உடனடியாக கைது செய்தால்தான் உடலை எடுக்க விடுவோம் என்று அவர்கள் கூறினர். மேலும் உடலை எடுப்பதற்காக ஊருக்குள் வந்திருந்த ஆம்புலன்சையும் நடுவழியில் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் ஊருக்குள் எந்தவொரு போலீஸ் வாகனமும் வரமுடியாதபடி சாலையில் பெரிய கற்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதவிர முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டில் ராஜாவின் உறவினர்கள், பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலப்பாளையம்-பத்தமடை மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொலையாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் சுமார் 2½ மணி நேரம் நடந்த சாலை மறியலை கைவிட்டனர்.

இதையடுத்து ராஜாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மேலப்பாளையம், முன்னீர்பள்ளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்காக ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில், முன்னீர்பள்ளம் பகுதியில் ஒருவரது சடலத்தை எடுத்துச் செல்லும்போது மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவரின் வீட்டில் பூக்களை வீசியதில் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான முன்விரோதத்தில் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலையில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

Next Story