எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க தவறிய கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க தவறிய நடிகர் கமல்ஹாசனை மக்கள் நிராகரிப்பார்கள் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திலேயே அதிக நாட்கள் முதல்-அமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. 16 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருந்த அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் ரூ.50 கோடியே 80 லட்சம் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவிலான நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது. ஜெயலலிதாவின் அடுத்த பிறந்த நாளுக்குள் நினைவு மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும்.
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவுக்கு ரூ.15 கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தினை விரைவில் தேர்வு செய்து அடிக்கல் நாட்டப்படும்.
நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் அரிச்சுவடியே தெரியவில்லை. அவர் அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு கொண்டு, விழித்து கொண்டிருக்கிறார். அவர் பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது. எதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். ஒரு அரசியல் தலைவருக்கான இலக்கணம் அவரிடம் இல்லை. பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அவர் என்னுடன் விவாதிக்க தயாரா?.
இதுவரை எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க தவறிய அவரை பொதுமக்கள் நிராகரிப்பார்கள். அவர் அரசியலில் இருந்தும், பொதுவாழ்வில் இருந்து காணாமல் போய் விடுவார்.
அ.தி.மு.க.வின் கூட்டணி பற்றி கனிமொழி எம்.பி.க்கு என்ன கவலை?. அவர் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியபோது, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூடா நட்பு கேடாய் முடிந்தது, பழத்தை தின்றவன் ஒருவன், அதனை பார்த்தவர் மீது வழக்கா? என்ற கூறினார். தற்போது காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. எனவே முரண்பாடான கூட்டணி வைத்தவர்கள் யார்? என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
பேரறிஞர் அண்ணாவும், மூதறிஞர் ராஜாஜியும் எதிரெதிர் கொள்கைகள் கொண்டாலும், தேர்தலில் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அவர்கள் கூட்டணி வைத்தனர். கொள்கை வேறு, கூட்டணி வேறு. இதுகுறித்து கனிமொழி எம்.பி. தரம் குறைந்து விமர்சிப்பது பொதுமக்களிடம் எடுபடாது.
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மக்களுக்கு நன்கு தெரியும். அதைப்பற்றி கீதாஜீவன் எம்.எல்.ஏ. கவலைப்பட வேண்டாம். கீதாஜீவன் அமைச்சராக இருந்தபோதுகூட தூத்துக்குடியில் 4-வது பைப் லைன் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
பின்னர் அ.தி.மு.க. ஆட்சியில் தூத்துக்குடியில் ரூ.295 கோடியில் 4-வது பைப்லைன் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கீதாஜீவன் பொது மேடைக்கு வந்தால், அவரிடம் இதுகுறித்து நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story