பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 4 ஹெலிகாப்டர்கள்: முதல்-மந்திரி குமாரசாமியின் கோரிக்கையை ஏற்று விமானப்படை ஏற்பாடு


பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 4 ஹெலிகாப்டர்கள்: முதல்-மந்திரி குமாரசாமியின் கோரிக்கையை ஏற்று விமானப்படை ஏற்பாடு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:28 AM IST (Updated: 26 Feb 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

பந்திப்பூர் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. முதல்- மந்திரி குமாரசாமியின் கோரிக்கையை ஏற்று விமானப்படை இந்த ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய வனச்சரணாலயங்களில் ஒன்று பந்திப்பூர் வனச்சரணாலயம். இது சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் இருந்து மைசூரு வரை 874 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

இந்த நிலையில் கோடை காரணமாகவும், ேபாதிய மழை பெய்யாததாலும் பந்திப்பூர் வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்துபோய்விட்டன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் தீப்பிடித்தது. இந்த தீ அங்குள்ள மரம், செடி, கொடிகளில் பிடித்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால் தீ மளமளவென பரவி வருகிறது. இதனால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.

இந்த தீயில் சிக்கி மான்கள், கரடி, முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் கருகிவிட்டன. கர்நாடக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பந்திப்பூர் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இந்த தீயை அணைக்க வனத்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் வன ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். 3 நாட்கள் தொடர் முயற்சியின் காரணமாக காட்டுத்தீ நேற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயினும் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை.

கடும் வெயில் மற்றும் பலமான காற்று ஆகியவற்றின் காரணமாக தீ எந்த நேரத்திலும் தீவிரம் அடையலாம் என்று வனத்துறையினர் அச்சப்படுகிறார்கள். காட்டுத்தீயில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரங்கள் எரிந்து சாம்பலாயின.

இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று வனத்துறை அதிகாரிகளுடன் ஆலேசானை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல் முறையாக பந்திப்பூர் வனப்பகுதியில் மிகப்பெரிய அளவுக்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் வனம் அழிந்துவிட்டது.

இந்த தீ குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும். தீயை அணைக்க உதவுமாறு விமானப்படை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். எனது கோரிக்கையை அந்த அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவ்வாறு குமாரசாமி கூறினார்.

இதற்கிடையே முதல்-மந்திரி குமாரசாமியின் வேண்டுகோளை ஏற்று, விமானப் படையை சோ்ந்த 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த 4 ராணுவ ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் வனத்துறையினர் தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும், பசுந்தழைகளை கொண்டும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுவதால், காட்டுத்தீ இன்று (செவ்வாய்க்கிழமை) காலைக்குள் முழுமையாக அணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story