கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு ‘சீல்’ வைப்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்கு ‘சீல்’ வைப்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 2:45 AM IST (Updated: 26 Feb 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதனை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி, 

திருவள்ளூரில் பழமை வாய்ந்த 108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் கோவிலை சுற்றி உள்ளது. கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர்.

இதுகுறித்த தகவல் வந்ததை தொடர்ந்து கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களுக்கு உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இருப்பினும் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல் தொடர்ந்து அதே இடத்தில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜான்சிராணி தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன், திருவள்ளூர் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள், கோவில் நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட முகமது அலி தெருவில் உள்ள வீடுகளுக்கு ‘சீல்’ வைக்க சென்றனர்.

இதில் 7 வீடுகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் குடியிருந்த தமிழ்ச்செல்வி (வயது 45) என்ற பெண், காலம் காலமாக வசித்து வரும் வீட்டை அகற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக கூறி தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறித்தனர். பின்னர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சில வீடுகளை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டது.

Next Story