ஒரே விமானத்தில் பயணித்த சித்தராமையா, எடியூரப்பா - சந்தித்து பேசியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு


ஒரே விமானத்தில் பயணித்த சித்தராமையா, எடியூரப்பா - சந்தித்து பேசியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Feb 2019 4:37 AM IST (Updated: 26 Feb 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து உப்பள்ளிக்கு சித்தராமையா, எடியூரப்பா ஆகியோர் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். அத்துடன் அவர்கள் சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா காங்கிரஸ் முன்னணி தலைவராக உள்ளார். இன்னொரு முன்னாள் முதல்-மந்திரியான எடியூரப்பா, கர்நாடக பா.ஜனதா தலைவராகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்கிறார்.

கர்நாடக அரசியலில் அவர்கள் இருவரும், எதிரெதிர் துருவங்களாக இருக்கிறார்கள். அரசியல் ரீதியாக இருவரும் மிக கடுமையாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொள்வது உண்டு. இந்த நிலையில் சித்தராமையா, எடியூரப்பா நேற்று காலையில் பெங்களூருவில் இருந்து ஒரே விமானத்தில் உப்பள்ளிக்கு சென்றனர்.

உப்பள்ளி விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கியதும், அவர்கள் இருவரும் அங்கு ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசினர். அவர்கள் என்ன பேசினர் என்று தெரியவில்லை.

இதுகுறித்து சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எடியூரப்பாவுடனான இந்த சந்திப்பு, திடீரென நடைபெற்றது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். அவ்வாறு எங்கள் கட்சி மேலிடம் என்னிடம் கூறவில்லை. மாநில அரசியலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் தொடங்கியுள்ளது.

மந்திரி பதவியை பகிர்ந்து கொண்டது போல், 2:1 என்ற விகிதத்தில் தொகுதிகளை ஒதுக்குமாறு அக்கட்சி கேட்கிறது. எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் தொகுதிகள் பங்கீடு செய்து கொள்ளப்படும்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி இணைந்து போட்டியிடும். தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. குதிரை பேர ஆடியோ உரையாடல் குறித்து சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரணை நடத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்தது.

இந்த விஷயத்தில் எனது பங்கு இல்லை. இதுகுறித்து முதல்-மந்திரியும், போலீஸ் மந்திரியும் முடிவு எடுப்பார்கள். சுயநலனுக்காகவே சிறப்பு விசாரணை குழுவை பா.ஜனதா எதிர்க்கிறது. இந்த விஷயத்தில் நான் ஒரே கல்லில் 2 பறவைகளை அடித்ததாக கூறுவது தவறு. இது சாத்தியமா?.

பரமேஸ்வருக்கு 3 முறை முதல்-மந்திரி பதவி கைநழுவி போனதாக அவர் கூறி இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி அவரிடமே போய் கேளுங்கள். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

எதிரெதிர் துருவங்களான சித்தராமையாவும், எடியூரப்பாவும் ஒரே விமானத்தில் பயணித்ததுடன் சந்தித்து பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story