மாணவியை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை, புகார் கொடுத்த அண்ணனுக்கு கொலை மிரட்டல் 3 பேர் கைது


மாணவியை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை, புகார் கொடுத்த அண்ணனுக்கு கொலை மிரட்டல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 10:45 PM GMT (Updated: 26 Feb 2019 6:48 PM GMT)

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்த அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25), சிவில் என்ஜினீயர். இவரும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தகுமார் ஆகியோருடன் காத்திருந்தார்.

பின்னர் மாணவி வந்ததும், அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். கார் சிறிது தூரம் சென்றதும், சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். மேலும் ஆபாச படத்தை காட்டி 4 பேரும் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டி நகையை பறித்து விட்டு காரில் இருந்து இறக்கி விட்டு சென்றனர்.

மேலும் தொடர்ந்து மாணவியை ஆபாச படத்தை வைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதன் பின்னர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் மாணவியை அழைத்து சென்ற காரும் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணன் சூளேஸ்வரன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. மேலும் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரை திரும்ப பெற வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் அண்ணன் கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் பொள்ளாச்சி சின்னாம்பாளையம் மலர்விழி நகரை சேர்ந்த திருஞானம் என்பவரது மகன் செந்தில் (33), ஆச்சிப்பட்டி காளிமுத்து என்பவரது மகன் வசந்தகுமார் (26), மணிகண்டன் (25), பொள்ளாச்சி வி.கே.வி. லே-அவுட் பழனிசாமி என்பவரது மகன் பாபு (26) என்பது தெரியவந்தது.

வழிமறித்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story