புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு நாளை வருகை


புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு நாளை வருகை
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டுக்கு நாளை (வியாழக்கிழமை) வருகிறார். விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் திறப்பு விழா நாளை (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. மேலும் ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், ஏற்கனவே முடிந்த திட்ட பணிகளை தொடங்கி வைக்கவும் ஈரோடு சி.எஸ்.ஐ. மைதானத்தில் விழா ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்பின்னர் அங்கிருந்து ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பந்தல் அமைக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வந்தது. அங்கு நேற்று காலை பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நடக்கும் விழா திடீரென மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பந்தல் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய மேம்பாலத்துக்கு அருகிலேயே விழா மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஈரோடு பிரப் ரோட்டில் நேற்று மாலை ஆய்வு செய்தனர். அப்போது விழா மேடை அமைக்கும் இடம், பொதுமக்கள் அமரும் இடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்து செல்லும் வழித்தடம் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும், ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆகியோருக்கு விழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story