விபத்தில் கால்களை இழந்த நாய் நடமாட உதவிய என்ஜினீயரின் மனிதாபிமானம்


விபத்தில் கால்களை இழந்த நாய் நடமாட உதவிய என்ஜினீயரின் மனிதாபிமானம்
x
தினத்தந்தி 27 Feb 2019 5:15 AM IST (Updated: 27 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் கால்களை இழந்த நாய்க்கு சிகிச்சை அளித்து வண்டி செய்து கொடுத்து என்ஜினீயர் ஒருவர் நடமாட வைத்தார்.

புதுச்சேரி,

புதுவை ரெயில் நிலைய பகுதியில் தெருநாய் ஒன்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குட்டிகளை ஈன்றது. அந்த நாய் குட்டிகளுடன் சென்றபோது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் மோதியதில் அது இறந்தது. அதன் குட்டிகளில் ஒன்று 2 பின்னங்கால்களும் அடிபட்டு கிடந்தது. இதனால் நடக்க முடியாமல் சாலையோரம் அந்த நாய் முடங்கிக்கிடந்தது. அதன் முனகல் சத்தம் கேட்ட போதிலும் அதற்கு உதவ யாரும் முன்வரவில்லை.

அப்போது அந்த வழியாக சென்ற புதுவை முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்த சிவில் என்ஜினீயர் அசோக்ராஜ் நாய்க்குட்டியின் முனகல் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தார். அப்போது தான் அது விபத்தில் சிக்கி கால்களை இழந்து இருப்பது அவருக்கு தெரியவந்தது. அந்த நாயை பார்த்து வேதனை அடைந்த அவர் அங்கிருந்து அதை கால்நடை மருத்துவரிடம் எடுத்து சென்றார்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நாய் உயிர் பிழைத்தது. ஆனாலும் பயனில்லை 2 பின்னங்கால்களையும் இழந்து நடமாட முடியாத நிலையில் தொடர்ந்து தவித்தது. இதனால் உடலை தரையில் போட்டு இழுத்து அந்த நாய் நகர்ந்து வந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. நாயின் நிலைமையை பார்த்து வேதனை அடைந்த என்ஜினீயர் அசோக் ராஜுக்கு ஒரு யோசனை பிறந்தது.

அதாவது, மாற்றுத்திறனாளிகள் பலர் மூன்று சக்கர வண்டிகளை பயன்படுத்துவது போல் கால்களை இழந்த நாய்க்கும் வண்டி செய்தால் என்ன என்பது தான் அது. இதற்காக தனது வீட்டில் உள்ள பழைய பிளாஸ்டிக் பைப்புகளை பயன்படுத்தி இழுவை வண்டியை உருவாக்கினார். அந்த வண்டி உருண்டு செல்ல சண்டே மார்க்கெட்டில் இருந்து பழைய சக்கரங்களை வாங்கிப் போட்டு வண்டி தயாரித்தார்.

அந்த வண்டியை நாய் நடமாடி செல்லும் வகையில் அதன் உடலில் பொருத்தி ஓடவிட்டு பார்த்த போது அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. மற்ற நாய்களை போல் இல்லாவிட்டாலும் இந்த வண்டியால் அந்த நாய் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்ல முடிந்ததை கண்டு என்ஜினீயர் அசோக்ராஜ் திருப்தி அடைந்தார். அந்த நாயை தனது வீட்டிலேயே வைத்து பராமரித்து வருகிறார்.

மனிதாபிமானம் குறைந்து வரும் இந்த காலகட்டத்தில் விபத்தில் கால்களை இழந்து தவித்த நாய் ஒன்றுக்கு சிகிச்சை அளித்ததுடன் அதை தனது யோசனையால் நடமாடவும் வைத்த என்ஜினீயர் அசோக்ராஜ் பாராட்டப்பட வேண்டியவரே.

அந்த குட்டி நாய், பின்னங்கால்கள் செயல்படாத நிலையில் சக்கர வண்டியின் உதவியால் நடமாடும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பாராட்டை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story