அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி அரசு நிகழ்ச்சியில் இருந்து தனவேலு எம்.எல்.ஏ. வெளியேறியதால் பரபரப்பு


அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி அரசு நிகழ்ச்சியில் இருந்து தனவேலு எம்.எல்.ஏ. வெளியேறியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Feb 2019 4:30 AM IST (Updated: 27 Feb 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதில்லை என்று அரசு அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி அரசு நிகழ்ச்சியில் இருந்து தனவேலு எம்.எல்.ஏ. பாதியில் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் “பொருளாதார அதிகாரம் குறித்த பெண்கள் திறன் வளர்ப்பு பயிற்சி” என்ற தலைப்பில் இளம் விதவைகளுக்கான இரு நாள் விழிப்புணர்வு பலயிரங்கம் பாகூரில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் தனவேலு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது அரசு அதிகாரிகளை விமர்சித்து பேசிவிட்டு, விழாவை புறக்கணித்து வெளியேறினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் ஏழை மக்களின் நலன் காக்க அரசால் பல்வேறு நலத் திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டங்களை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை. எனது தொகுதியில் உள்ள காட்டுக்குப்பம் கிராமத்தில் கைத்தறி நெசவு தொழிலுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.

இந்த மையத்தில் பயிற்சி பெறும் பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் நூல்களை சுற்றும் எந்திரம் வீட்டிற்கே வழங்கப்படும் என்றும், இதனை வீட்டிலேயே செய்தால் குறிப்பிட்ட வருவாய் கிடைக்கும் என்று கூறி திட்டத்தை தொடங்கினார்கள். ஆனால் பயிற்சி முடித்தவுடன் யாருக்கும் அந்த எந்திரத்தை தரவில்லை.

அதேபோல் கன்னியக்கோவில் பகுதியில் தையல் பயிற்சி பெற்றவர்களுக்கு இதுவரை சான்றிதழ் வழங்கவில்லை. ஆட்டோ ஓட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு சான்றிதழும், மானிய விலையில் ஆட்டோவும் வழங்கப்படும் என்றனர். ஆனால் வழங்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த பெண்கள், எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னிடம் புகார் தெரிவித்தனர். அதுபற்றி நான் அதிகாரிகளை கேட்டால் உடனே அதிகாரிகள் சம்பந்தபட்ட பெண்களை மிரட்டுகிறார்கள். ஏன் எம்.எல்.ஏ.விடம் செல்கிறீர்கள் என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். எந்த திட்டம் தொடங்கினாலும் அதனை ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டு, ஒரு சிலருக்கு மட்டும் திட்டத்தின் உதவிகளை கொடுத்துவிட்டு செல்கிறார்கள். திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவது கிடையாது.

இந்த நிகழ்ச்சி நடக்கிறது என்று எனக்கு முன்கூட்டியே தெரியாது அப்படி தெரிந்திருந்தால் இங்கு இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதித்திருக்க மாட்டேன். நான் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும்கூட மக்களுக்காக போராடுவேன்.

இவ்வாறு பேசிய தனவேலு எம்.எல்.ஏ. தொடர்ந்து “நான் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story