கீழடியில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு தொல்லியில்துறை ஆணையாளர் தகவல்
கீழடியில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது என்று தொல்லியில்துறை ஆணையர் கூறினார்.
திருப்புவனம்,
தமிழக அரசின் தொல்லியல்துறை சார்பில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம் திருப்புவனம் அருகே பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், தொல்லியல்துறை ஆணையருமான உதயச்சந்திரன் தலைமை வகித்தார். தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட காப்பாட்சியர் ஆசைத்தம்பி வரவேற்றார்.
இதில் பங்கேற்ற தொல்லியல்துறை ஆணையர் பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:– கீழடியில் டிரோன் எனும் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் நிலத்தில் 7 முதல் 10 மீட்டர் ஆழத்திற்குள் உள்ள கட்டிடங்கள், தொல்பொருட்கள் இருந்தால் தடயம் கிடைக்கும். இதுபோன்ற அறிவியல் தரவுகள் மூலம் தமிழகம் முழுவதும் முக்கியமான இடங்களில் ஆய்வு செய்ய உத்தேசித்துள்ளோம்.
கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கார்பன் பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி பரிசோதித்ததில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது தமிழர் நாகரிகம் என நிரூபணமாகியுள்ளது. உலக அளவில் வெளிவரும் மிக முக்கியமான ஆராய்ச்சி இதழில், தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் அருகே அத்திரம்பாக்கம் எனும் இடத்தில் கிடைத்த ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளை ஆய்வு செய்ததில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்ற தகவல் கிடைத்தது.
ஆதிச்சநல்லூரில் மிக விரைவில் அரசின் சார்பில் தொல்லியல் ஆய்வுகளை தொடருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். அதேபோல் கடலுக்கு அடியில் ஆய்வுகள், சோழர்கால ஆய்வு முயற்சிகள் என தொடர் ஆய்வுகள் செய்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் வகையிலான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளை உரிய சான்றுகளோடு தமிழர்களின் பழமையை, தொன்மையை உலகுக்கு வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பயிலரங்கத்தில், சாகித்ய அகாடமி விருதாளர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற தொல்லியல் அலுவலர் சாந்தலிங்கம், கல்லூரி தாளாளர் கனகசபை, சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, கல்லூரி தலைவர் அண்ணாமலை, துணைச் செயலாளர் அசோக், கல்லூரி முதல்வர் ராஜராஜேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.