மானாமதுரை அருகே 40 வருடங்களாக தண்ணீர் காணாத வளநாடு கண்மாய் விவசாயத்தை மறந்த விவசாயிகள்
மானாமதுரை அருகே உள்ள வளநாடு கண்மாய் கடந்த 40 வருடங்களாக தண்ணீரை காணாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் விவசாயத்தை மறந்துவிட்டனர்.
மானாமதுரை,
மானாமதுரையில் இருந்து 2 கி.மீ தூரத்தில் வளநாடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். வைகை ஆற்றில் இருந்து பாசன கால்வாய் மூலம் மானாமதுரை கண்மாய்க்கு தண்ணீர் வந்து நிரம்பி மறுகால் பாய்ந்து வளநாடு கண்மாய்க்குதான் முதலில் வரும். அதையொட்டி 150 ஏக்கர் பரப்பளவுள்ள நச்யோடை என்ற வளநாடு கண்மாயை நம்பி சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நெல், வாழை என பயிரிட்ட விவசாயிகள் கடந்த 40 ஆண்டுகளாக கடும் வறட்சியில் சிக்கி தவிக்கின்றனர். இது குறித்து வளநாடு கிராமத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற காவல் அதிகாரி தங்கசாமி என்பவர் கூறுகையில், காவல்துறை பணியில் இருந்த போது கண்மாய் எப்படி இருந்ததோ, நான் ஒய்வு பெற்று 7 வருடங்களுக்கு மேல் ஆகியும் கண்மாய் அப்படியே உள்ளது. சுமார் 40 வருடங்களாக விவசாய நிலங்கள் அனைத்தும் மறைந்து போய், கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
கண்மாய் மடைகள் அனைத்தும் தண்ணீர் வெளியேற வழியின்றி மூடிவிட்டன. சமூகவிரோதிகளின் புகலிடமாக கண்மாய் மடைகள் மாறிவிட்டன. விவசாயமே செய்யாததால் இந்த கிராம மக்கள் பலரும் விவசாயம் செய்வதையே மறந்து விட்டனர். பொதுமக்கள் பலரும் கட்டிட பணிக்காக சிவகங்கை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விட்டனர். விவசாய வேலை கிடைக்காமல் பலரும் வெளியூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். மீதிமுள்ளவர்கள் அருகில் உள்ள செங்கல் காளவாசல்களில் கூலிவேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாகி கருவேல மரங்கள் பெருகிவிட்டன. வறட்சி நிவாரண உதவி தொகை பெற கூட வழியின்றி உள்ளனர். பல ஆண்டுகளாக வருவாய்த்துறை ஆவணங்களில் தரிசு நிலம் என பதிவாகி விட்டதால் அரசின் நிவாரண உதவி கூட பெற முடியாமல் உள்ளனர். எனவே தமிழக அரசும், பொதுப்பணித்துறை நிர்வாகமும் வளநாடு கண்மாயை தூர் வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குறிப்பாக வரும் தலைமுறையினர் விவசாயத்தை மறந்துவிடுவார்கள் என்ற நினைவு வேதனையாக உள்ளது. தற்போது கலெக்டர் வரத்து கால்வாய், கண்மாய் போன்றவையை தூர் வார கவனம் செலுத்தி வருகிறார். விவசாய பணிகளுக்கும் முன் உரிமை கொடுத்து வருகிறார். எனவே எங்களது வளநாடு கண்மாய் முழுமையாக தூர் வாரி விவசாயம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதை இங்குள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர் என்றார்.