அருப்புக்கோட்டை அருகே வாலிபரை கொன்று குவாரியில் உடல் வீச்சு
அருப்புக்கோட்டை அருகே வாலிபரை கொன்று கல் குவாரியில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இங்குள்ள 200 அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இதில் அழுகிய நிலையில் ஒரு வாலிபர் உடல் மிதந்தது. இதனை அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று பல மணி நேரம் போராடி வாலிபரின் உடலை மீட்டனர்.
இறந்து கிடந்த வாலிபருக்கு 25 முதல் 30 வயது வரை இருக்கும். அவரது முகம் சிதைந்திருந்தது. உடலில் ரத்தக் காயங்கள் இருந்தன. எனவே அவர் கொலை செய்யப்பட்டு கல் குவாரியில் வீசப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவரை எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.