பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளைமறுநாள் தொடக்கம், மாவட்டத்தில் 41,071 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வை 41 ஆயிரத்து 71 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (1-ந் தேதி) தமிழ் முதல் தாள் தேர்வுடன் தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 299 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 20 ஆயிரத்து 68 மாணவர்களும், 21 ஆயிரத்து 3 மாணவிகளும் என மொத்தம் 41 ஆயிரத்து 71 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களை தவிர 2 ஆயிரம் தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுத உள்ளனர்.
இந்த தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்து 80 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வின்போது மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 486 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட இருக்கின்றனர்.
மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு வசதி மற்றும் தடையற்ற மின்சார வசதி, போக்குவரத்து வசதிஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வையொட்டி சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு அவை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகம், செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 இடங்களில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story