பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல்: “இந்திய ராணுவத்தின் பதிலடி பெருமையாக உள்ளது” கயத்தாறு வீரரின் மனைவி பேட்டி


பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல்: “இந்திய ராணுவத்தின் பதிலடி பெருமையாக உள்ளது” கயத்தாறு வீரரின் மனைவி பேட்டி
x
தினத்தந்தி 27 Feb 2019 4:00 AM IST (Updated: 27 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

“பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதல் பெருமையாக உள்ளது” என்று கயத்தாறு வீரர் சுப்பிரமணியனின் மனைவி கூறினார்.

தூத்துக்குடி,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகி கொண்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்திய ராணுவத்தின் இந்த பதிலடிக்கு பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியனின் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். மேலும் சுப்பிரமணியனின் உருவப்படத்துக்கு அவருடைய மனைவி கிருஷ்ணவேணி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி கூறுகையில், “என் கணவரின் இறப்புக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்துக்கு நன்றி. இது எனக்கு பெருமையாக உள்ளது. என் கணவர் இறந்த நாளுக்கு பின்னர் இப்போதுதான் அவருடைய படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளேன். இந்த பதிலடி தாக்குதலை நான் நன்றிக்கடனாக பார்க்கிறேன். அரசுக்கு என் நன்றி” என்றார்.

சுப்பிரமணியனின் தந்தை கணபதி கூறும்போது, “இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதலுக்கு நன்றி. பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட வேண்டும். அவர்களின் முகாம்களை தகர்க்க வேண்டும்” என்றார்.

காஷ்மீர் மாநிலம், புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கார்குடியை சேர்ந்த ராணுவ வீரர் சிவசந்திரன் வீரமரணம் அடைந்தார்.

பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர் சிவசந்திரனின் மனைவி காந்திமதி கூறியதாவது:-

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

எனவே பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும். தற்போது நடந்துள்ள இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல் சற்றே ஆறுதல் அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story