“அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர உள்ளது” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. மட்டுமல்ல, மேலும் பல கட்சிகள் சேர உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி பயணிகள் விடுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் விசுவலிங்கம், பாலசுப்பிரமணியன், உதவி நிர்வாக பொறியாளர்கள் செந்தூர்பாண்டியன், கஹாரின், உதவி பொறியாளர் மெர்சி, கழுகுமலை நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, கோவில்பட்டி 2-வது குடிநீர் குழாய் திட்டத்தில் 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் 7 தொட்டிகள் அமைக்கும் பணி முடிந்து ஏற்கனவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மற்ற 3 இடங்களில் நீர்த்தேக்க தொட்டிகள் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது கோவில்பட்டி நகருக்கு தண்ணீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது. 248 கிராம கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க 831 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 790 கிலோ மீட்டர் பணி முடிந்துவிட்டது. விரைவில் பணிகள் முடியும் என்று தெரிவித்தார். மேலும் கழுகுமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க, தேவைப்பட்ட இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வினியோகம் செய்ய அறிவுரை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தல் அறிவித்த உடன் தான் கூட்டணி என்பது முழுவடிவம் பெறும். தற்போது மகத்தான கூட்டணி அமைத்து உள்ளோம். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு மார்ச் முதல் வாரத்துக்குள் வர உள்ளது. அப்போது தே.மு.தி.க. மட்டும் அல்ல. இன்னும் பல கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் சேரும் சூழ்நிலை உள்ளது.
கிராமசபை கூட்டம் நடத்துவது மு.க.ஸ்டாலினுக்கு காலம் கடந்த ஞானோதயம். மக்களிடம் கோரிக்கையை மனுக்களாக வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவைகளை தீர்க்க வேண்டியவர்கள் நாங்கள் தான். மு.க.ஸ்டாலின் செய்வது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை.
சட்டமன்ற தேர்தல் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. 3 ஆண்டுகளாக செய்யாத வேலையை தற்போது தேர்தல் வரும் வேளையில் செய்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். அவர் எதிர்க்கட்சி தலைவராக வந்ததில் இருந்து விரக்தியின் எல்லைக்கே சென்று விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story