பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கியதில் முறைகேடு: சி.பி.ஐ. விசாரணை கோரி விவசாயிகள் சாலை மறியல் தஞ்சையில், 37 பேர் கைது
பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதால் சி.பி.ஐ. விசாரணை கோரி தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்ட 37 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி பருவத்தில் 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் சேர பிரிமிய தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விவசாயிகள் செலுத்தினர்.
வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்குவதற்காக ரூ.138 கோடி பெறப்பட்டது. இந்த தொகையை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பயனாளிகள் பட்டியலை முழு முகவரியுடன் வழங்க வலியுறுத்தியும், சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரியும் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கூட்டுறவு காலனியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் நேற்று ஒன்று கூடினர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளரை சந்திக்க அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால் அனைவரையும் உள்ளே அனுப்ப முடியாது என கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையின் குறுக்கே நின்றபடி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டுறவு சங்க அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதற்கு திருப்பூந்துருத்தி விவசாயி விஸ்வஜித் காடேராவ் தலைமை தாங்கினார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன், நெடார் தர்மராஜன், தோட்டக்காடு திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தால் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 37 விவசாயிகளை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் சுந்தரவிமல்நாதன் நிருபர்களிடம் கூறும்போது, விவசாயிகளுக்கு வந்த காப்பீட்டுத் தொகையை செலுத்துவதில் தஞ்சை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் அதிகாரிகள் மிகப்பெரிய அளவில் முறைகேடு செய்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதை வலியுறுத்தி உரிய பதில் கிடைக்கும் வரை காத்திருக்கலாம் என வந்தோம். ஆனால் அதிகாரிகள் யாரும் இல்லை. போலீசாரும் போராட்டம் நடத்த அனுமதிக்காமல் கைது செய்கின்றனர் என்றார்.
Related Tags :
Next Story