கடலூரில் 2,944 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் - அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்
கடலூரில் நடைபெற்ற விழாவில் 2,944 பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர்,
சமூக நலத்துறையின் சார்பில் ஏழை பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கடலூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி அன்பழகி வரவேற்று பேசினார்.
விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2,944 ஏழை பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் 23 கிலோ 552 கிராம் தாலிக்கு தங்கமும், நிதி உதவியையும் வழங்கினார். இவர்களில் பட்டம் மற்றும் பட்டய படிப்பு முடித்த 779 பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 கோடியே 89 லட்சத்து 50 ஆயிரமும், 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த 2,165 பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரமும் என மொத்தம் ரூ.9 கோடியே 30 லட்சத்து 75 ஆயிரம் திருமண நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் பேசும்போது கூறியதாவது:-
எல்லோரும் படிக்க வேண்டும் என்பதுதான் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் விருப் பம். பெண்கள் படித்தால்தான் சமுதாயம் முன்னேறும். எனவே பிளஸ்-2 படித்தவர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டும்.
ஏழைபெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கத்துடன் நிதி உதவி வழங்கும் திட்டம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 905 பெண்களுக்கு ரூ.132 கோடியே 81 லட்சம் திருமண நிதி உதவித்தொகை மற்றும் தலா 4 மற்றும் 8 கிராம் வீதம் 191 கிலோ 208 கிராம் தங்க நாணயங்கள் தாலிக்காகவும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நகரசபை முன்னாள் தலைவர் குமரன், முன்னாள் துணை தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வம், கந்தன், சாந்தி, ஆர்.வி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story