பஸ் கவிழ்ந்து விபத்து: சேலம் டிரைவருக்கு கோர்ட்டு நூதன தண்டனை - ‘நன்னடத்தை அலுவலகத்தில் ஒரு ஆண்டு கையெழுத்திட வேண்டும்’
பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்படுத்திய சேலம் டிரைவருக்கு, நன்னடத்தை அலுவலகத்தில் ஒரு ஆண்டு கையெழுத்திட வேண்டும் என கோர்ட்டு நூதன தண்டனை விதித்தது.
சேலம்,
பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வழக்கில் சேலம் டிரைவருக்கு கோர்ட்டு நூதன தண்டனை விதித்துள்ளது. இதன்படி பஸ் டிரைவர் சேலம் நன்னடத்தை அலுவலர் அலுவலகத்தில் ஒரு ஆண்டு கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). இவர் தனியார் பஸ் டிரைவர். கடந்த 2009-ம் ஆண்டு ஏற்காடு மலைப்பாதையில் பஸ்சை ஓட்டி சென்றார். அப்போது திடீரென்று பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்தார். 18 பேர் காயம் அடைந்தனர். விபத்து தொடர்பாக, கவனக்குறைவாக பஸ்சை ஓட்டி சென்று, விபத்து ஏற்படுத்தியதாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பெருமாளை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 5-ல் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்தது. இதையொட்டி நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி கணேசன், நூதன தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார்.
அதன்படி நீதிபதி கணேசன் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பஸ் டிரைவர் பெருமாள், ஒரு ஆண்டுக்கு தினமும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள நன்னடத்தை அலுவலர் அலுவலகத்தில் நேரில் வந்து கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story