திருவண்ணாமலையில், மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


திருவண்ணாமலையில், மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:15 AM IST (Updated: 27 Feb 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

செங்கம் அருகே புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசின் விலையில்லா ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு நடந்தது. இதில் ஒரு மாற்றுத்திறனாளி உள்பட 250 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அந்த மாற்றுத்திறனாளி தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து அந்த மாற்றுத்திறனாளி புதுப்பாளையாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டு உள்ளார்.

இதுகுறித்து உரிய பதில் கிடைக்காததால் நேற்று முன்தினம் காலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருடன் இணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் அவர்களிடம் எந்தவித பேச்சுவார்த்தையும் செய்யாததால் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விலையில்லா ஆடுகள் வழங்குவதில் பயனாளிகள் முறையாக தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் போட்டனர். இரவு 12 மணிவரை போராட்டம் நீடித்தது.

போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்களது போராட்டம் தொடர்ந்தது.

இதையடுத்து நேற்று மதியம் 2 மணியளவில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கலெக்டர் அலுவலகத்திற்கு கலெக்டரிடம் அழைத்து சென்றனர். பின்னர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அவர்களிடம் உங்களது கோரிக்கை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story