திருவண்ணாமலையில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டம்


திருவண்ணாமலையில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2019 4:15 AM IST (Updated: 27 Feb 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே மண்டல போக்குவரத்து அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ராமசாமி நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடை திறக்கப்படுவதற்கு முன்பே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை இங்கு வரக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் டாஸ்மாக் கடை அங்கு திறக்கப்பட்டது.

இதனை கண்டித்து கடந்த 7-ந் தேதி ராமசாமி நகர், கீழ்நாச்சிப்பட்டு, நம்மியந்தல், வட ஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இருப்பினும் அந்த கடை தொடர்ந்து செயல்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ராமசாமி நகர், கீழ்நாச்சிப்பட்டு, நம்மியந்தல், வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் போராட்டம் நடத்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். போராட்டம் குறித்து ஏற்கனவே தகவல் அறிந்த டாஸ்மாக் கடை பணியாளர்கள் கடையை மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கடையின் அருகில் இருந்த செங்கற்களை கொண்டு மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையின் முன்பு அடுக்கினர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், நாங்கள் இந்த கடையை அகற்றக்கோரி இதுவரை 4 முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கடையினால் மதுபிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, இந்த கடையை இங்கிருந்து உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கூறி மாற்று ஏற்பாடு செய்யப்படும். அதுவரை இந்த கடை திறக்கப்படாது என்றனர். மாற்று ஏற்பாடு வேண்டாம், எங்களுக்கு கடை நிரந்தரமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது போலீஸ் அதிகாரி ஒருவர், நீங்கள் வீணாக கடையை மூட வேண்டும் கூலிக்காக வந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளர்கள் என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நாங்களா, கூலிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு மண்டல போக்குவரத்து கழக அலுவலகம் அருகில் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போதும் அவர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டு மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story