குமரிக்கு 1-ந் தேதி வருகை: பிரதமர் மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு - டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு


குமரிக்கு 1-ந் தேதி வருகை: பிரதமர் மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு - டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 27 Feb 2019 4:37 AM IST (Updated: 27 Feb 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி 1-ந்தேதி வருவதையொட்டி, 3 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தினார்கள்.

நாகர்கோவில்,

பிரதமர் நரேந்திரமோடி வருகிற 1-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். இதையொட்டி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று அரசு நிகழ்ச்சியாகும். இதற்காக தனி மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் சார்பில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள நாகர்கோவில் பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். மேலும் பல்லாயிர கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதையடுத்து அதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள மற்றொரு மேடையில் தமிழக பா.ஜனதா சார்பில் அரசியல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும், பா.ஜனதா கட்சியின் சார்பில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தேசிய, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இதையொட்டி பிரதமர் மோடி வந்து செல்லும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வருகிற 1-ந் தேதி பிற்பகலில் ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்துக்கு செல்கிறார். அவர் செல்லும் பாதை மற்றும் விழா மேடை ஆகிய பகுதிகள் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மேலும் டெல்லியில் இருந்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகளும் குமரி வந்துள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் பிரதமர் செல்லும் பாதை, விழா நடைபெறும் மைதானம், விழா மேடை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

பிரதமர் வருகை பாதுகாப்பு பணிக்காக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும், பிற மாவட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் போலீசார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) வருகை தருகிறார்கள்.

இதற்கிடையே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தை பார்வையிட்டு, மேடை அமைக்கும் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருகை தருவதை தொடர்ந்து நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் தனி செயலாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் தலைமையிலும் நேற்று நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story