கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 27 Feb 2019 4:43 AM IST (Updated: 27 Feb 2019 4:43 AM IST)
t-max-icont-min-icon

அனகாபுத்தூரில் கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி (39). விஜயகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று காலை விஜயகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் விஜயகுமார் வெளியே சென்று விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வி, இனிமேலும் கணவரை திருத்த முடியாது என்று கருதி, வீட்டில் யாரும் இல்லாதபோது குளியல் அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிறிதுநேரம் கழித்து வீட்டிற்கு வந்த விஜயகுமார், மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story