கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் நின்று பெண் தற்கொலை முயற்சி
வேலூர் சத்துவாச்சாரியில் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் தேசிய நெடுஞ்சாலையில் நின்று தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர்,
வேலூர் தொரப்பாடி நேதாஜிநகரை சேர்ந்தவர் யோகராஜ். இவர் அரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் சவுமியாவிற்கும், சைதாப்பேட்டையை சேர்ந்த டிராவல்ஸ் நடத்தி வரும் லோகேஷ் என்பவருக்கும் கடந்தாண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவன்-மனைவி இருவரும் சி.எம்.சி. காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக லோகேஷ் வீட்டிற்கு சரியாக வரவில்லை என்றும், சவுமியா குடும்பத்தினரிடம் பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக சவுமியாவிற்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் பாகாயத்தில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதற்கிடையே சவுமியா கடந்த சில நாட்களுக்கு முன்பாக சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதில், கணவர் லோகேஷை, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சவுமியா தனது தாயாருடன் நேற்று சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த போலீசாரிடம், தனது கணவரை அழைத்து பேசி என்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறினார். இதையடுத்து லோகேஷ் செல்போன் எண்ணை போலீசார் பல முறை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் அதற்கு பதிலளிக்கவில்லை.
அதனால் விரக்தி அடைந்த சவுமியா, தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி திடீரென போலீஸ் நிலையம் முன்பு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே நின்று தற்கொலைக்கு முயன்றார். அதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அங்கு சென்று, அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தினர்.
பின்னர் சவுமியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். கணவருடன் சேர்த்து வைக்க விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சவுமியாவிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story