பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: வேலூர் மாவட்டத்தில் 41,422 மாணவர்கள் எழுதுகின்றனர்


பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: வேலூர் மாவட்டத்தில் 41,422 மாணவர்கள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:30 AM IST (Updated: 27 Feb 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேலூர், 

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 422 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். அவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 2 ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளராக பணியாற்றுவார்கள். தேர்வு மையங்களை கண்காணிக்கவும், காப்பியடிப்பவர்களை பிடிக்கவும் 200 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. அதுதவிர கலெக்டர், முதன்மைக்கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மையங்களை கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் வந்து சேர்ந்து விட்டன. வினாத்தாள்கள் 16 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கதவுகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். அந்த வளாகத்திற்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வினாத்தாள்கள் 44 வழித்தடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

தமிழ் பாடத்துக்கான தேர்வு நாளை நடக்கிறது. தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

முதல் 10 நிமிடம் கேள்வித்தாளை படித்துப் பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பகல் 12.45 மணிவரை நடைபெறும். தேர்வு நேரம் தொடங்கியதும் மாணவ-மாணவிகள் முதலில் தங்களுக்கு எந்தக் கேள்விக்குப் பதில் நன்றாக தெரியுமோ அதனை எழுதிவிட வேண்டும். பின்னர் மற்ற கேள்விகளுக்குப் பதில் எழுத முயற்சிக்க வேண்டும்.

தேர்வு மையங்களில் இருந்து முன் கூட்டியே வெளியேறக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் தேர்வு மையத்தில் மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் தேர்வு மையத்தில் காப்பி அடிக்கவோ, மற்றவர்கள் விடைத்தாளை பார்த்து எழுதுவது போன்ற தவறான செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டாம். மீறி தவறாக நடக்க முயன்றால், நிச்சயமாக கண்காணிப்பாளரால் கையும், களவுமாக பிடிபடுவதுடன், தேர்வு மையத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story