நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் லாரி தண்ணீருக்கு பஞ்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி.நிறுவனங்களை மூடும் அபாயம்


நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் லாரி தண்ணீருக்கு பஞ்சம் அடுக்குமாடி குடியிருப்புகள், ஐ.டி.நிறுவனங்களை மூடும் அபாயம்
x
தினத்தந்தி 28 Feb 2019 4:30 AM IST (Updated: 28 Feb 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் லாரி தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்போரூர்,

‘ஓ.எம்.ஆர்.’ என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக கூறப்படும் பழைய மாமல்லபுரம் சாலை சென்னையின் நவீன அடையாளங்களுள் ஒன்றாகும். இது பூஞ்சேரி கூட்டு சாலையில் தொடங்கி மத்திய கைலாஷ் வரை நீண்ட நெடிய சாலையாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சதுப்பு நிலக்காடுகளாகவும், விவசாய நிலமாகவும் அறியப்பட்ட இந்த சாலை தற்போது வான் உயர்ந்த கட்டிடங்கள், வழுக்கும் சாலையில் பறக்கும் சொகுசு கார்கள், பன்னாட்டு உணவு விடுதிகள், சொகுசு சினிமா தியேட்டர்கள் என வெளிநாட்டை போன்ற தோற்றம் அளிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி பழைய மாமல்லபுரம் சாலையில் சுமார் 360 தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறி உள்ளனர். குறைந்த பட்சம் 3 அடுக்குமாடிகளில் இருந்து அதிகபட்சம் 50 அடுக்குமாடிகள் வரை உள்ள இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் 6 வீடுகளில் இருந்து சுமார் 3,500 வீடுகள் வரை உள்ளன. சினிமா மால், ஷாப்பிங் மால், நீச்சல் குளம் என நட்சத்திர ஓட்டல் தரத்தில் ஒரு குட்டி உயர்தர நகரத்திற்கு ஈடாக இவை இருக்கிறது.

இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் தலா ஆயிரம் பேர் வசிப்பதாக கணக்கிட்டாலும் 360 குடியிருப்புகளில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள்.

மேலும் இந்த சாலையில் டி.சி.எஸ்., சி.டி.எஸ்., காக்னிசென்ட் என கிட்டத்தட்ட 82–க்கும் மேற்பட்ட தனியார் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. சிறுசேரி சிப்காட்டில் மட்டும் 31 ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. இதில் டி.சி.எஸ். எனும் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் மட்டும் 36 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சாலையில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 3½ லட்சம் இருக்கும்.

ஆக மொத்தம் பழைய மாமல்லபுரம் சாலையில் மட்டும் கடந்த 2005–ம் ஆண்டில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாக குடியேறி உள்ளனர். இவர்கள் தினமும் குளிப்பது முதற்கொண்டு குடிப்பது வரைக்குமான தண்ணீர் வசதி வெளியில் இருந்தே பெறப்படுகிறது.

இந்த பகுதியை ஒட்டியுள்ள தாழம்பூர், சிறுசேரி, பொன்மார், புதுப்பாக்கம், மாம்பாக்கம், காயார், பனங்காட்டுபாக்கம், வெண்பேடு, இள்ளலூர், தண்டலம், ஆலத்தூர், பையனூர், திருப்போரூர், கன்னகப்பட்டு, காலவாக்கம், தையூர் உள்ளிட்ட சுமார் 22–க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்துவரப்படுகிறது.

இப்படி குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகள் ஒவ்வொன்றும் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் இருந்து 32 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாக உள்ளன.

சராசரியாக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி நாள் ஒன்றுக்கு ஒரு கிணற்றில் இருந்து 10 லோடு தண்ணீர் வினியோகம் செய்தாலும் ஒரு கிணற்றில் இருந்து ஒரு லாரி மூலம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் 346 கிணறுகளில் நாள் ஒன்றுக்கு என்றாலும் கூட 6 கோடியே 92 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கே கிட்டத்தட்ட 7 கோடி லிட்டர் என்றால் ஒரு மாதத்திற்கு மட்டும் 210 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு மட்டும் சராசரியாக ஒரு ஏரி தண்ணீர் காலி ஆகிறது. அதாவது 800 ஏக்கரில் இருந்து 1,500 ஏக்கர் வரை விவசாயம் செய்ய பயன்படுத்தப்படும் பாசன நீர் செலவாகிறது.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் இந்த தண்ணீர் விற்பனை பழைய மாமல்லபுரம் சாலையின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகு விரைவாக குறைந்து வருவதால் கடல்நீர் உயர்ந்து கிராமங்களுக்குள் ஊடுருவி வருகிறது.

இந்தநிலை நீடித்தால் இந்த ஆண்டே பழைய மாமல்லபுரம் சாலையை சுற்றியுள்ள 300–க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் வறட்சியையும், கடும் தண்ணீர் பஞ்சத்தையும் சந்திக்கவேண்டிய சூழல் நிலவுகிறது.

மேலும் விளைநிலங்கள், குடியிருப்புகள் அத்தனையும் உப்பு மண் ஆகி போகும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக உள்ளுர் கிராம மக்கள் தண்ணீர் கேட்டு காலிக்குடங்களுடன் வீதிக்கு வந்து போராடும் சிக்கலும் உள்ளது. உள்ளூர்வாசிக்கே தண்ணீர் இல்லாதபோது, குடியிருப்புவாசிகள் பயன்படுத்த தண்ணீருக்கு எங்கே போவது?.

அதனால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஐ.டி. நிறுவனங்களை மூட வேண்டி வரலாம், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்படலாம்.

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் ஐ.டி. நிறுவனங்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மட்டுமல்லாது தண்ணீர் தேவைப்படுகின்ற சுற்றுவட்டார கிராமங்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு முன்வர வேண்டும், இதுதான் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பகுதியை சூழ்ந்துள்ள அபாயத்தை தடுக்கும் உடனடி தீர்வாக அமையும்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–

விவசாயத்தில் லாபம் இல்லாததால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். கடைசியில் பண நஷ்டமும் மன உளைச்சலுமே விவசாயிக்கு மிஞ்சுகிறது. இதனால் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரை விற்கும் நெருக்கடிக்கு விவசாயி ஆளாகிறான்.

ஒரு நடைக்கு 200 ரூபாய் கிடைக்கிறது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் என மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 4 அல்லது 5 மாதங்கள் உழைத்து பயிர் வைத்தால் ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரை லாபம் கிடைத்த நிலையில் எந்த உழைப்பும் இன்றி வெறும் தண்ணீர் விற்பதால் மட்டும் ஒரு மாதத்தில் ரூ.60 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story