குரோம்பேட்டையில் துணிகரம்:` கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண் என்ஜினீயரிடம் நகை பறிப்பு
குரோம்பேட்டையில், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண் என்ஜினீயரிடம் நகையை பறித்த மர்மநபர், துப்பட்டாவால் அவரது கைகளை கட்டிப்போட்டு விட்டு தனது கூட்டாளிகளுடன் தப்பிச்சென்று விட்டார்.
தாம்பரம்,
சென்னை தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை நியூ காலனி, 12–வது தெருவில் வசித்து வருபவர் பிருந்தா (வயது 27). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த வீட்டில் அவர் தனது தோழிகளுடன் தங்கி உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை பிருந்தா, வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரே மோட்டார்சைக்கிளில் 3 மர்மநபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.
அவர்களில் 2 பேர் பிருந்தாவின் வீடு அமைந்துள்ள தெருமுனையில் மோட்டார்சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் பிருந்தாவை பின்தொடர்ந்து சென்றார்.
இதை அறியாமல் பிருந்தா தனது வீட்டின் கதவை திறந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர், திடீரென பிருந்தாவை அவரது வீட்டுக்குள் தள்ளி கதவை பூட்டினார். தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகையை பறித்தார்.
பிருந்தாவின் துப்பட்டாவால் அவரது கைகளை கட்டிப்போட்டுவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடி, தெரு முனையில் மோட்டார்சைக்கிளில் தயாராக நின்ற தனது கூட்டாளிகளுடன் தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.