முதுமலை வனப்பகுதியில் வறட்சி, கிளன்மார்கன், காமராஜ் சாகர் அணைகளில் தண்ணீர் திறப்பு


முதுமலை வனப்பகுதியில் வறட்சி, கிளன்மார்கன், காமராஜ் சாகர் அணைகளில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 4:15 AM IST (Updated: 28 Feb 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், கிளன்மார்கன், காமராஜ் சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் வனவிலங்குகள் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 65 சதவீத வனப்பகுதிகள் உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, காட்டெருமை, புள்ளி மான், புலி, சிறுத்தைப்புலி, கரடி, செந்நாய், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முதுமலை வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. நடப்பாண்டில் நீலகிரியில் பல இடங்களில் உறைபனி பொழிவு அதிகளவில் இருந்ததே காரணம் ஆகும். இதனால் வனப்பகுதிகளில் உள்ள புற்கள் கருகி காய்ந்து விட்டன.

குறிப்பாக முதுமலை வனப்பகுதிகளில் குளம், தடுப்பணை, குட்டை, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்ட நிலையில் காணப்படுகிறது. சாலையோரங்களில் உள்ள மரங்கள் காய்ந்து இலைகள் உதிர்ந்து கிடக்கிறது. இந்த காட்சியை பார்க்கும் போது கோடை காலம் தொடங்கி விட்டது போல் இருக்கிறது. வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு தேடி ஊட்டி அருகே எப்பநாடு கிராம பகுதிக்குள் சீகூர் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் புகுந்தன. இதனை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதையடுத்து வறட்சியால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த நீரை வனவிலங்குகள் குடித்து தாகம் தீர்த்து வருகின்றன. இதற்கிடையே முதுமலை வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதால், பல ஏக்கர் வனப்பகுதியில் இருந்த புற்கள், மரங்கள் எரிந்து நாசம் ஆனது. மேலும் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வனவிலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்காக அணைகளில் இருந்து தண்ணீரை திறந்து விட மாவட்ட நிர்வாகம் மின்வாரியத்துக்கு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ஊட்டி அருகே கிளன்மார்கன் அணை மற்றும் காமராஜ் சாகர் அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. கிளன்மார்கன் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கால்வாய் வழியாக வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம், சீகூர் நீர்வீழ்ச்சி வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது.

இந்த தண்ணீர் சீகூர், தெப்பக்காடு வனப்பகுதிகள் வழியாக செல்கிறது. வறட்சியால் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள் அந்த தண்ணீரை குடித்து தாகம் தணிக்கின்றன. மழை பெய்யும் வரை 2 அணைகளில் இருந்து வனவிலங்குகளுக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பைக்காரா அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் பைக்காரா நீர்வீழ்ச்சி வழியாக கிளன்மார்கன் அணைக்கு செல்கிறது. அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

Next Story