காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டு்ம் மனிதநேய ஜனநாயக கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆக்கூர்,
நாகை மாவட்டம் ஆக்கூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் சங்கைதாஜ்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெப்ருதீன், கிளை பொருளாளர் முக்தார், துணை செயலாளர்கள் சல்மான், முகம்மது அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை ஒருங்கிணைப்பாளர் முகம்மது ரபி வரவேற்று பேசினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி மற்றும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நடத்துவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மனிதநேய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்துவது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடுவது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்றும், பசுமை தீர்ப்பாய்த்தின் உத்தரவை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டு்ம்.
வருகிற பொது தேர்தலில் மீண்டும் வாக்குசீட்டு முறையை கொண்டு வர வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம் விரைந்து சரி செய்ய வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் அரசு விதிமுறைப்படி மணல் குவாரியை திறக்க வேண்டும். மணல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மனிதநேய தொழிற்சங்க அணி செயலாளர் புரோஸ் அகமது மற்றும் கிளை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் கிளை ஆலோசகர் தைய்யூப்அலி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story